Enable Javscript for better performance
இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்று நடுவதுதான் மிகச் சிறந்த வழி: நடிகர் விவேக்- Dinamani

சுடச்சுட

  

  இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்று நடுவதுதான் மிகச் சிறந்த வழி: நடிகர் விவேக்

  By DIN  |   Published on : 14th June 2019 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vivek-actor11xx

  இயற்கையைப் பாதுகாக்க மிக்சிறந்த வழி மரக்கன்று நடுவதுதான் என்று வேலூரில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் தெரிவித்தார்.
  ஈஷா பசுமை கரங்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் வேலூர் பசுமைப் பள்ளி இயக்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா ஊரீசு கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், திரைப்பட நடிகர் விவேக் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து வேலூரில் நடப்பு கல்வியாண்டில் 4 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
  பின்னர், நடிகர் விவேக் பேசியது:
  வேலூர் என்றால் நினைவுக்கு வருவது ஒன்று "ஜெயில்', மற்றொன்று "வெயில்'. இதை மாற்றி வேலூர் என்றால் குயில் கூவும் இடமாக்க ஊரெல்லாம் மரக் கன்றுகள் நடும் பணியை ஈஷா செய்து வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், என்னை நேரில் அழைத்து உலக வெப்பமயமாதல் குறித்தும், அதற்கு மரக் கன்று நடுவதன் அவசியம் குறித்தும் விளக்கினார். அப்போதுமுதல் நான் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து பேசி வருகிறேன். மேலும், அப்துல் கலாம் பெயரில் தொடங்கிய இயக்கம் மூலம் ஒரு கோடி மரங்கள் நடுவதை இலக்காக வைத்து தற்போது வரை 30 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். அந்த எண்ணிக்கையை மேலும் வேகமாக உயர்த்த ஈஷாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளேன்.
  இந்த பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பு முதன்முதலில் தோன்றியது மரங்கள்தான். அவற்றால் பூமி, உயிரினங்கள் வாழத் தகுந்த இடமாக மாறியது. ஆனால், தற்போது மனிதர்கள் அத்தகைய மரங்களை அழித்துவிட்டு பூமியை உயிரினங்கள் வாழ முடியாத நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை அளிக்கக்கூடிய மரங்கள் ஒவ்வொருவருக்கும் அன்னையாகத் திகழ்கிறது. மரங்கள் இருந்தால்தான் மழையும் கிடைக்கும். எனவே, இயற்கையைப் பாதுகாக்க மிகச் சிறந்த வழி மரம் நடுவதுதான். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் நடப்படும் மரங்கள் நன்றாக வளர்கின்றன என்றார் அவர்.
  ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியது: 100 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் மரங்களால் நிறைந்து குளுமையாக இருந்தது. பல்வேறு காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டு தற்போது வேலூரில் வெயில் அதிகரித்துள்ளது. 
  வேலூரில்  வெப்பத்தைக் குறைத்து குளுமையை உருவாக்குவதற்கு அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும். இதை ஒரு தனி நபரால்  செய்ய முடியாது. மக்கள் இயக்கத்தால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதற்காக, பள்ளி கல்வித்  துறையும் ஈஷா பசுமை கரங்களும் இணைந்து பசுமை பள்ளித் திட்டத்தை வேலூரில் செயல்படுத்தி வருகிறோம். 
  அரசு சார்பில் வனத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை என பல துறைகள் மூலம் மரக் கன்றுகள் நடப்படுகின்றன. அவற்றைவிட ஈஷாவுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தும் இந்த பசுமைப் பள்ளித் திட்டம் அதிக பலன் தருகிறது. அதற்கு மாணவர்களின் நேரடி பங்களிப்புதான் முக்கிய காரணம் என்றார் அவர்.
  ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா திட்ட விளக்க உரையாற்றினார். ஈஷா யோகா மைய வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai