சுடச்சுட

  

  வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் என்.ரமேஷ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.ஸ்ரீதரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் சி.பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
  வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். 
  மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் போக்கி, ஆறு, மலை, வனம் உள்ளிட்ட கனிமவள கொள்ளையைத் தடுக்க வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
  தொடர்ந்து கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றபோது, அவர் அங்கு இல்லாததால் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து வாலாஜாபேட்டை  வட்டாட்சியர் வை.பூமா விரைந்து வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai