அதிகாரிபோல் பேசி வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 14th June 2019 03:45 AM | Last Updated : 14th June 2019 03:45 AM | அ+அ அ- |

வங்கி அதிகாரி போல் பேசி ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் வேலூர் மாவட்டத் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் தெரிவித்தார்.
காட்பாடியை அடுத்த அருப்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (44). இவர், அபுதாபியில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் தனது குடும்பச் செலவுக்காக வீட்டு வங்கிக் கணக்குக்கு ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பியதாகத் தெரிகிறது.
பணம் வந்த சில நிமிடங்களில் அவர்கள் வீட்டு செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கி அதிகாரி என்றும், ஏடிஎம் எண் முடக்கப்பட்டுள்ளது, அதை சரி செய்ய ஏடிஎம் ரகசிய எண்ணை கூறும்படியும் தெரிவித்தாராம். அதை நம்பி செந்திலின் மகன் ஏடிஎம் ரகசிய எண்ணைக் கூறிய சில நிமிடங்களில் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்திலின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கேட்டபோது, அவ்வாறு வங்கியில் இருந்து யாரும் ரகசிய எண்ணை கேட்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நாடு திரும்பிய செந்தில், இந்த நூதன திருட்டு குறித்து வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.