தலைமை ஆசிரியரைக் கண்டித்து பள்ளியைப் பூட்டி போராட்டம்
By DIN | Published On : 14th June 2019 06:40 AM | Last Updated : 14th June 2019 06:40 AM | அ+அ அ- |

மது அருந்திவிட்டு தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்ததைக் கண்டித்து வியாழக்கிழமை, பெற்றோர் பள்ளியைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ். இவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவாராம். இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணைக்குச் சென்ற தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், அரும்பாக்கம் வந்து கிராம மக்களை தரக் குறைவாகப் பேசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஜெயலலிதா தலைமையில் வியாழக்கிழமை பள்ளிக்குப் பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெமிலி வட்டாரப் பள்ளிகளில் இருந்து 5 பேர் கொண்ட தலைமை ஆசிரியர் குழுவினர், அரக்கோணம் கிராமிய போலீஸார் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.