பொதுமக்களுக்கு இடையூறாக கழிவுநீர்: எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 19th June 2019 07:57 AM | Last Updated : 19th June 2019 07:57 AM | அ+அ அ- |

ஆம்பூர் பெத்லகேம் பகுதிக்குச் செல்லும் ரயில்வே குகை வழிப்பாதை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக கழிவுநீர் அடிக்கடி தேங்குவதால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆம்பூர் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
ஆம்பூர் பெத்லகேம் பகுதிக்குச் செல்ல ஆம்பூரில் இரு ரயில்வே குகை வழிப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் இந்த இரு குகை வழிப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியிருக்கும். மற்ற காலத்தில் கழிவுநீர் தேங்கியிருக்கும். அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், அப்பகுதிக்குச் செல்ல ரூ. 30 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. பல அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், அப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் தேங்கியிருப்பதால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதற்காக ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆம்பூர் நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன், பொறியாளர் எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர், திமுக ஆம்பூர் நகரச் செயலர் எம்.ஆர். ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆனந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.