சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளாகியும் சாலை வசதி இல்லாத நெக்னாமலை: 30 ஆண்டுகளாகத் தொடரும் போராட்டம்
By என்.தமிழ்செல்வன் | Published On : 23rd June 2019 12:34 AM | Last Updated : 23rd June 2019 12:34 AM | அ+அ அ- |

நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளாகியும் வேலூர் மாவட்டத்திலுள்ள நெக்னாமலை கிராமத்துக்கு இதுவரை சாலை வசதி அமைத்துத் தரப்படவில்லை. இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த நோயாளிகளை மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல டோலி கட்டி சுமந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமங்களில் ஒன்று நெக்னாமலை. கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இந்த கிராமத்தினர், கேழ்வரகு, கடலை, சோளம், சாமை, தினை ஆகிய தானியங்களை உற்பத்தி செய்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்காயம், வாணியம்பாடி சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம்.
இந்த கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை 15 மாணவ, மாணவிகளும், அங்கன்வாடி மையத்தில் 10 குழந்தைகளும் படித்து வருகின்றனர். நெக்னாமலை கிராமத்துக்கு சென்றுவர இதுவரை சாலை வசதி அமைக்கப்படாததால், இருக்கும் ஒரே ஆசிரியரும் 4 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்றாக வேண்டியுள்ளது.
இந்த கிராம மக்களும் இத்தனை ஆண்டுகளாக மலையில் இருந்து வரும் மழைநீர் வழிந்தோடும் பாதையை (கணவாய்) பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, முதியவர்களையும், நோயாளிகளையும் ஆலங்காயம், வாணியம்பாடி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல நேரிடும்போது டோலி கட்டியே தூக்கிச் செல்ல வேண்டியுள்ளதாக கிராமத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சுதா(32) வெள்ளிக்கிழமை இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். எனினும், சாலை வசதி இல்லாததால் அவரை உடனடியாக ஆலங்காயம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல், சனிக்கிழமை அதிகாலையில் டோலி கட்டி 5 கி.மீ. தூரம் சுமந்து சென்றனர். இதனால், அப்பெண் இரவு முழுவதும் வலியால் துடித்ததாக அவரது கணவர் கார்த்தி தெரிவித்தார்.
இதேபோல், பிரசவ வலி ஏற்படும் கர்ப்பிணிப் பெண்கள், நோய்களால் அவதிப்படுவோர், பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகளால் கடிபட்டவர்கள் என பலரையும் சாலை வசதி இல்லாததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளாகியும் இன்னும் நெக்னாமலை கிராமத்துக்கு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், இந்த கிராமத்தினர் மட்டுமின்றி இங்குள்ள அரசுப் பள்ளி, அங்கன்வாடி மைய ஆசிரியர்களும் தினமும் ஆலங்காயத்தில் இருந்து குண்டும்குழியுமான கணவாய் வழியாகவே வந்து செல்கின்றனர்.
மழைக்காலம் என்றால் அந்தக் கணவாயையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
நெக்னாமலைக்கு சாலை வசதி அமைத்துத் தரக் கோரி அரசு அதிகாரிகளிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், ஏராளமான போராட்டங்களும் நடத்தியுள்ளோம். எனினும், இதுவரை நெக்னாமலைக்கு சாலை வசதி அமைத்துத் தரப்படவில்லை.
கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் இந்த கிராமத்திலுள்ள 3 ஏரிகளும் வறண்டு தற்போது கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதுடன், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாசி படர்ந்து கிடக்கும் கிணற்று நீரை குடிநீருக்காக பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும் இப்பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு நெக்னாமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரவும், குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறியது:
நெக்னாமலை கிராமத்துக்கு சாலை அமைத்துத் தர சுமார் 32 கொண்டை ஊசி வளைவுகளை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அதிகப்படியான செலவுகள் ஆகக்கூடும். இருப்பினும், சாலைவசதி செய்யக் கூடிய வழித்தடங்களை ஆய்வு செய்து வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டதும் தேவையான நிதியைப் பெற்று வனத்துறை மூலமாகவே சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நெக்னாமலை கிராமத்தில் உள்ள ஒரு ஏரி, ஒரு குட்டை, இரண்டு பொதுக் கிணறுகளில் ஒன்றும் வறண்டு விட்டன. மற்றொரு பொதுக் கிணற்றில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளது. மூன்று தனியார் விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ஏற்கெனவே வற்றியுள்ள பொதுக் கிணற்றை மேலும் ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள ஒரு சிறிய கிணற்றில் தூர் வாரும் பணியும் நடந்து வருகிறது என்றார் அவர்.