மின்வாரிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 23rd June 2019 12:31 AM | Last Updated : 23rd June 2019 12:31 AM | அ+அ அ- |

பள்ளிகொண்டா அருகே மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமாபுரம் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த 5 நாள்களாக கிராமத்திற்கான மின் விநியோகம் தடைபட்டது. மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை மின்மாற்றியை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் அந்த கிராமத்திற்குத் தேவையான குடிநீர் விநியோகம் தடைபட்டது. அது மட்டுமின்றி அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான தண்ணீரைப் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதனால் அதிருப்தியடைந்த அந்த கிராம மக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் இது தொடர்பாக அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மின்வாரிய உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மின் விநியோகத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.