பாலாற்றில் மணல் குவாரி  அமைக்க எதிர்ப்பு

கே.வி. குப்பம் அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கே.வி. குப்பம் அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
கவசம்பட்டு கிராமம் அருகே பாலாற்றில் கிணறுகள் அமைத்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ், கே.வி.குப்பம், கவசம்பட்டு, காவனூர், பி.கே. புரம், வடுகந்தாங்கல், வேப்பங்கநேரி, பில்லாந்திபட்டு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
மேலும், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட சில ஊராட்சிகளுக்கும் இங்கிருந்து குழாய் அமைத்து குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. 
இந்நிலையில் கவசம்பட்டு அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
இதையடுத்து குவாரி அமைக்க பொதுப் பணித் துறையினர் செவ்வாய்க்கிழமை பணியைத் தொடங்கினர்.  தகவலறிந்த சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு சென்று மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுப் பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் உமாராணி, உதவிப் பொறியாளர் கண்ணன் மற்றும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
குவாரி அமைத்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும், தங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகும் என்றனர். 
மீறி அங்கு மணல் குவாரி அமைத்தால், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை திரும்ப கொடுத்து விடுவதாகவும், அரசு அலுவலகங்கள் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி முடிவெடுப்பதாகக் கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com