பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் வேலூரில் ரூ.883 கோடியில் திட்டப்பணிகள்

பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சிப் பகுதியில் ரூ.883 கோடிக்கு 34 திட்டப் பணிகள்

பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சிப் பகுதியில் ரூ.883 கோடிக்கு 34 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நடவடிக்கை மேறகொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர்வேலூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் வேலூர் மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.883 கோடி மதிப்பில் 34 திட்டப்பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டு பணிகள் படிப்படியாக தொடங்கி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில், குடிநீர் விரிவாக்கப் பணிகளுக்காக குடிநீர் வடிகால் வாரியம், அம்ருத் திட்டம் மூலமாக ரூ.243 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.
வேலூர் மாநகராட்சியின் தற்போதைய குடிநீர்த் தேவை நாளொன்றுக்கு 74 எம்எல்டி ஆகும். மாநகராட்சியின் சொந்தத் திட்டங்கள் மூலமாக 30 எம்எல்டி, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 24 எம்எல்டி என மொத்தம் 54 எம்எல்டி நீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 115 லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்க முடிகிறது. தற்போது பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் விரிவாக்கப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்போது நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். 
மேலும், 2.4 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்திப் பூங்கா ரூ.13.24 கோடியில் அமைக்கப்படுகிறது. தவிர, மாநகராட்சி முழுவதும் 98 இடங்களில் பூங்காக்கள், 64 இடங்களில் சத்துணவுக் கூடங்கள், கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல 198 இடங்களில் சிறு பாலங்கள், அமலான்குட்டையில் எரிவாயு தகன மேடை, கஸ்பா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், மின்செலவைக் குறைக்க 20,528 விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றம், மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் காட்சிகளைக் கண்காணிக்க 3,000 சதுர அடியில் கண்காணிப்புக் கூடம், புதிய, பழைய பேருந்து நிலையங்கள் மற்றும் லாரி ஷெட் பகுதிகளில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 129 கட்டடங்களில் சூரியமின் தகடுகள் பொருத்தி அருகில் உள்ள பள்ளிகளின் மின்செலவை பூஜ்ஜியமாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 400 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் கோட்டை அகழியை தூர்வாருவதுடன், கோட்டையைச் சுற்றி மின்விளக்கு அலங்காரம் செய்வது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கெனவே உள்ள 23 வார்டுகள் தவிர இணைக்கப்பட்ட மற்ற 37 வார்டுகளிலும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்தப் பணிகளை வரும் 2021 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி ஏற்கெனவே குப்பையில்லாத, குப்பைத் தொட்டிகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேலும் செம்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக வேலூர் மாநகராட்சிக்கு இதுவரை ரூ.212 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் நிதி ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து, திட்டப் பணிகளுக்கு உரிய நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
அப்போது, மாநகராட்சிப் பொறியாளர் சீனிவாசன், உதவி ஆணையர்கள் மதிவாணன், கண்ணன், செந்தில், மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com