காவல் துறை ஆவணங்கள் பெற பொதுமக்கள் நேரில் வர அவசியமில்லை: எஸ்.பி. பிரவேஷ்குமார் தகவல்
By DIN | Published On : 28th June 2019 07:26 AM | Last Updated : 28th June 2019 07:26 AM | அ+அ அ- |

"காவல்துறை ஆவணங்களையும், சான்றுகளையும் பெற பொதுமக்கள் காவல்நிலையங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. இணையதளம் மூலமாகவே இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்' என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், வாலாஜா, புதிய செட்டித்தாங்கல், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சின்னக்கண்ணுவின் மகன் சேகர். அவர் கடந்த மே 14-ஆம் தேதி காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததை அடுத்து ஒரு மாதத்துக்குப் பிறகு சேகரின் மனைவி ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காணமல் போன சேகர் தொடர்பாக, போலீஸார் குற்றம், குற்றவியல் கண்காணிப்பு வலைத்தொடர் அமைப்பு (சிசிடிஎன்எஸ்) மூலம் ஆராய்ந்தனர். அப்போது, அவர் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி காலை 10 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் கூறியது:
தற்போதைய நவீன கால கட்டத்தில் தமிழக காவல்துறையில் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு ள்ளன. எனவே, பொதுமக்கள் www.eservices.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக, காணாமல் போன நபர்கள், அடையாளம் தெரியாத சடலங்கள், இணையவழிப் புகார் பதிவு, அதன் நடப்பு விவரங்கள், இழந்த ஆவண அறிக்கை, காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழ், விபத்து வழக்குகளில் உரிய ஆவணங்கள் பெறுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்காக பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதளம் மூலமாகவே ஏராளமான வசதிகளை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.