குடிநீர்த் தட்டுப்பாடு: கிராமங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட கிராமப்புறங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்

குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட கிராமப்புறங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுனில் பாலிவால் வியாழக்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டார். 
வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோக மேலாண்மை குறித்து ஆய்வு கூட்டம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக தொழிலாளர் நலத் துறை அரசு முதன்மைச் செயலருமான சுனில் பாலிவால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
தொடர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 
காவேரிப்பாக்கம் ஒன்றியம், மேல்வீராணம் ஊராட்சி  பேருந்து நிலையத்தில்  காத்திருந்த பொதுமக்களிடம் அவர் கேட்டபோது, குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
பல வீடுகளில் ஆழ்துளைக் கிணற்றில் 100 அடியில் இருந்த தண்ணீர், 500 அடிக்கு சரிந்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேறு நல்ல இடத்தை தேர்வு செய்து அங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என்றனர்.
போளிப்பாக்கம் ஊராட்சி பிள்ளையார்குப்பம் கிராம மக்களிடம் கேட்டபோது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வருகிறது. அதிலும் குறைந்த அளவு நீர் மட்டுமே வருகிறது. ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் வருவில்லை. போளிப்பாக்கம் ஏரியின் மூலமாக தண்ணீர் வருகிறது. இது போதுமானதாக இல்லை என்றனர்.  பின்னர் தாளிக்கள் ஊராட்சியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலர், பெருமாள்ராஜபேட்டை ஊராட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதையும் கேட்டறிந்தார். 
இதேபோல், சோளிங்கர், வாலாஜாபேட்டை ஒன்றியம் பொன்னை கீழ்பள்ளேரி, பொன்னை கொண்டகுப்பம், உதயேந்திரம் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். 
ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டஇயக்குநர் பெ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com