குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
By DIN | Published On : 02nd March 2019 06:33 AM | Last Updated : 02nd March 2019 06:33 AM | அ+அ அ- |

ஆற்காடு நகரில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
ஆற்காடு நகராட்சிக்குள்பட்ட ஜெயம் நகர் பகுதியில், 10 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், தரம்பிரிக்க, ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான பணிகள், கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது, ஜெயம் நகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், குப்பைக் கிடங்கு அமைத்தால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் எனக்கூறி, குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.