ராணிப்பேட்டையில் 2.27 லட்சம் டன் குரோமியக் கழிவுக் குவியல்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆய்வு

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவித்து வரும் சுமார் 2.27 லட்சம் டன்

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவித்து வரும் சுமார் 2.27 லட்சம் டன் குரோமிய திடக்கழிவுக் குவியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எஸ்.பி. சிங் பரிஹார் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகளில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியேறும் குரோமியம் கலந்து நீர், நேரடியாக நிலத்திலும், பாலாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலும் கலந்து வருவதால், நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவில் மாசடைந்து, பொதுமக்களையும், கால்நடைகளையும் நோய்களுக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். 
  இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் குரோமியக் கழிவுகளை அகற்ற திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து அளிக்க ஆய்வு மேற்கொண்டன.
 அதன் தொடர்ச்சியாக சிப்காட்டில் குவிக்கப்பட்டுள்ள குரோமியக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. அதன்பேரில், இங்கிலாந்து நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆலோசனை நிறுவனமான இ.ஆர்.எம். (​E‌n‌v‌i‌r‌o‌n‌m‌e‌n‌t R‌e‌s‌o‌u‌r​c‌e Ma‌n​a‌g‌e‌m‌e‌n‌t)    நிறுவனத்தைச் சேர்ந்த வில்லியம் ஏ. பட்லர் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவினர், புதுதில்லியில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் குரோமியக் கழிவு தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 அப்போது ரூ. 100 கோடி செலவில் 3 ஆண்டுகளில் அவற்றை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்தப் பணியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். இதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்த உள்ளதாக சமூக அமைப்புகளும், ராணிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி மக்களும் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
அதையடுத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், மாவட்ட இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் குரோமியக் திடக் கழிவுகளை பார்வையிட்டு, அதன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். 
இந்நிலையில் புதுதில்லியில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எஸ்.பி.சிங் பரிஹார், குரோமிய திடக்கழிவுக் குவியலை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பாக அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, ராணிடெக் எனும் ராணிப்பேட்டை பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்துக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, வேலூர் மண்டல சுற்றுச்சூழல் இணைத் தலைமை பொறியாளர் ராஜகோபால், மற்றும் ராணிடெக் தலைவர் ரமேஷ்பிரசாத், இயக்குநர் ஜபருல்லா, பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com