சுடச்சுட

  

  பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகே தேர்தலில் போட்டி: ஆட்சியர் 

  By எஸ்.ஏ.ராமன்  |   Published on : 16th March 2019 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர் 5 ஆண்டுகளுக்குப் பிறகே தேர்தலில் போட்டியிட முடியும். அதற்குரிய சான்றிதழை அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.  
  மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்களுக்கான அறிவுரைகள் குறித்த கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
  மக்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வோர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணைப்படி மார்ச் 19 முதல் 26-ஆம் தேதி வரை உள்ள அரசு வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 23, 24-ஆம் தேதி அரசு விடுமுறை நாள்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட மாட்டாது. எக்காரணம் கொண்டும் காலை 11 மணிக்கு முன்போ, மாலை 3 மணிக்கு பிறகோ வேட்புமனு பெற இயலாது. 
  தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வோர் வைப்புத் தொகையாக ரூ. 25 ஆயிரம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வைப்புத் தொகையாக ரூ. 12,500-ம் செலுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிட வேட்பாளரின் குறைந்தபட்ச வயது 25. வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களுக்கென புதிய வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்க வேண்டும்.
   வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் அரசு அலுவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்புமனுவுடன் அவர் அதற்குரிய சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
  வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். 
  தேர்தலுக்காக தற்காலிகமாக அமைக்கப்படும் தேர்தல் கட்சி அலுவலகங்கள் அரசுக் கட்டடம், அரசுக்குச் சொந்தமான இடங்கள், தனியார் கட்டடங்களில் வாடகைக்கு அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் அமைக்கக் கூடாது. மேலும், வழிபாட்டுத் தலங்கள், வழிபாட்டுத் தல வளாகத்துக்குள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை அருகே அலுவலகம் அமைக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ள வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அலுவலகம் அமைக்கக் கூடாது. 
  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசியல் கட்சியினர் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள் போன்றவை வைக்கக் கூடாது என்றார்.
  இதைத் தொடர்ந்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் (விவி பேட்) இயந்திரம் குறித்த செயல் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai