புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி

புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதோடு, வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களின் கடமை என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.


புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதோடு, வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களின் கடமை என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருப்பத்தூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி கலந்துகொண்டு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். கூட்டத்தில், சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் ஆர்.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகியவையும் அடங்கும். திருப்பத்தூரில் 267, ஜோலார்பேட்டையில் 265 வாக்குச் சாவடிகள் உள்ளன. திருவண்ணாமலை தொகுதியில் ஆண், பெண் வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தம் 1,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 180 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனத் தெரிய வந்துள்ளது. அந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு செல்வதில் உள்ள வசதி மற்றும் வாக்குப் பதிவு முடிந்தபின் வாக்குகளை திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
புகார் தெரிவிக்க...: தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், செல்லிடப்பேசியில் சி-விஜில் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, நடத்தை விதிமீறல் குறித்த படம் மற்றும் விடியோ எடுத்தும் அனுப்பலாம். புகார்கள் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக மாவட்ட அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 2 தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அவற்றின் மூலமும் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com