சோளிங்கரில் விரைவில் காலணித் தொழிற்சாலை: அமைச்சர் எம்.சி.சம்பத்

சோளிங்கர் தொகுதியில் ஷூ உற்பத்தி செய்யும் தோல் தொழிற்சாலை விரைவில் அமையும் என தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சோளிங்கர் தொகுதியில் ஷூ உற்பத்தி செய்யும் தோல் தொழிற்சாலை விரைவில் அமையும் என தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் கோ. சம்பத் ஆகியோரை ஆதரித்து அவர் திங்கள்கிழமை பேசினார். காவேரிப்பாக்கம் ஒன்றியம், வெங்குப்பட்டு ஊராட்சியில் வேன் மூலம் பிரசாரத்தை மேற்கொண்ட அவர் மேலும் பேசியது:
சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேலையின்மை என்பது இளைஞர்களிடையே பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்காகவே காவேரிப்பாக்கம் அருகே உள்ள பனப்பாக்கம் பகுதியில் ஷூ உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்க ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுடன் முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த தொழிற்சாலை விரைவில் அமையும். இதனால் காவேரிப்பாக்கம், நெமிலி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் இப்பகுதியில் உருவாக உள்ள சிப்காட் வளாகத்திலும் பல தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இப்பணிகள் நடைபெறக் காரணம் அதிமுக அரசு மட்டுமே என்றார் அவர்.
இந்தப் பிரசாரத்தில் வேட்பாளர் சம்பத், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், அரக்கோணம் எம்எல்ஏ-வுமான சு.ரவி, அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் ஏழுமலை, ஒன்றியச் செயலர்கள் காவேரிப்பாக்கம் ராஜா, சோளிங்கர் கார்த்திகேயன், மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலர் ஏ.எல்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com