தொழிலதிபரின் மகன்கள் சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மறைந்த தொழிலதிபர் ஜி.ஜி.ரவியின் மகன்கள் சென்ற கார் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை


மறைந்த தொழிலதிபர் ஜி.ஜி.ரவியின் மகன்கள் சென்ற கார் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை வேலூர் வடக்கு போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினராக இருந்த ஜி.ஜி.ரவியும், அவரது சகோதரர் ஜி.ஜி.ரமேஷும் கல்லூரி ஒன்றை நிர்வகித்து வந்தனர். அத்துடன், பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தனர். அவர்களுக்கும், ரௌடி குப்பன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதில், ஜி.ஜி.ரமேஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக குப்பன், அவரது கூட்டாளி மகாலிங்கம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.ஜி.ரவியைக் கொலை செய்ய முயன்றபோது, ரவியின் உறவினர்களால் மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதில் ஜி.ஜி.ரவி காயமடைந்தார். மகாலிங்கம் கொலைக்குப் பழியாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜி.ஜி.ரவி வேலூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரௌடி குப்பனை போலீஸார் கைது செய்தனர். 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டதால் ஜி.ஜி.ரவியின் சகோதரர் ஜி.ஜி.செல்வம்(49) தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை கேட்டுப் பெற்றிருந்தார். எனினும், போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஜி.ஜி.செல்வம் மீது 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2017 டிசம்பர் மாதம் தோட்டப்பாளையம் பகுதியில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. 
இந்நிலையில், ஜி.ஜி.ரவியின் மகன்கள் கோகுல்(30), தமிழ்மணி(28) ஆகியோர் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் தோட்டப்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பேசிக் கொண்டிருந்தனர். 
அப்போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று கோகுல், தமிழ்மணி ஆகியோரின் கார் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக கோகுல், தமிழ்மணி ஆகியோர் காரைவிட்டு இறங்கி வெளியேறினர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 
இதனிடையே, கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பது குறித்து தகவலறிந்த கோகுல், தமிழ்மணி உள்பட அவரது நண்பர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அருகந்தம்பூண்டி தெருவில் இதுதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு தரப்பினர் மது பாட்டில்களையும், மற்றொரு தரப்பினர் கற்களையும் மாறிமாறி வீசினர்.
தொடர்ந்து, எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டைகளால் தாக்க முயன்றதை அடுத்து தப்பிச்சென்ற கோகுல், தமிழ்மணி தரப்பினர் அப்பகுதியில் உள்ள ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தங்கும் விடுதிக்குள் நுழைந்தனர். விடுதிக் காவலாளி நுழைவு வாயில் கேட்டை பூட்டியதை அடுத்து அவர்களைத் துரத்தி வந்த கும்பல் விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கற்களால் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து வேலூல் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் வடக்கு போலீஸார் விரைந்து சென்றதை அடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், மகாலிங்கம் கொலைக்கு பழி வாங்க குப்பன் கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com