Enable Javscript for better performance
வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளில் 47 வேட்புமனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளில் 47 வேட்புமனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 47 மனுக்கள் ஏற்கப்பட்டன. 
    மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர்  ஏ.சி.சண்முகம், அவருக்கு மாற்றாக அவரது மனைவி லலிதாலட்சுமி, திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், அவருக்கு மாற்றாக அவரது மனைவி சங்கீதா, அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சி.தீபலட்சுமி உள்பட மொத்தம் 16 பேர் 32 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
    அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, அவருக்கு மாற்றாக  கே.சரவணன், திமுக சார்பில் சா.ஜெகத்ரட்சகன், அவருக்கு மாற்றாக சு.சரவணன், அமமுக சார்பில்  என்.ஜி.பார்த்திபன். மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன் நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  டி.தாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் யு.ஆர்.பாவேந்தன் உள்பட மொத்தம் 12 பேர் 29 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
    இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களான எஸ்.ஏ.ராமன் (வேலூர்), ஜெ.பார்த்திபன் (அரக்கோணம்) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், வேலூர் தொகுதியில் 24 வேட்புமனுக்களும், அரக்கோணம் தொகுதியில் 23 வேட்புமனுக்களும் என மொத்தம் 47 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
    வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை சின்னங்களுடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சட்டப்பேரவைத் தொகுதிகள்
    ஆம்பூர்
    ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சி.பேபி இந்திரா புதன்கிழமை அறிவித்தார்.
    ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்காகப் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை ஆம்பூர் தொகுதிக்கான மத்திய தேர்தல் பார்வையாளர் எப்ஃட் அரா முன்னிலையில் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சி. பேபி இந்திரா மனுக்களை பரிசீலனை செய்தார். மொத்தம் பெறப்பட்ட 18 வேட்பு மனுக்களில் அதிமுக ஜெ. ஜோதிராமலிங்கராஜா, திமுக அ.செ.வில்வநாதன், அமமுக ஆர்.பாலசுப்பிரமணி, நாம் தமிழர் ந.செல்வமணி, மக்கள் நீதி மய்யம் கரீம் பாஷா, சுயேச்சை வேட்பாளர்கள் ஷோபா பாரத், சுசிலா, கோபி, ஆர்.வெங்கடேசன், சலாவுதீன் ஆகிய 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
    திமுக மாற்று வேட்பாளர் பத்மாவதி, அதிமுக மாற்று வேட்பாளர் ஸ்ரீமதி, நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் வெங்கட்ராமன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன், சுயேச்சைகள் மனிதன், ரஹ்மான், நாம் தமிழர் கட்சி பிரதான வேட்பாளர் செல்வமணி 2-ஆவதாக தாக்கல் செய்த வேட்பு மனு உள்பட 7 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் சு.ராஜ்குமாரின் வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த அவருடைய வாக்காளர் பட்டியல் நகல் ஆவணத்திலும், வாக்காளர் அடையாள அட்டையிலும் முகவரியில் வேறுபாடு இருந்ததால், சார்-ஆட்சியரின் சான்றிட்ட நகல் வியாழக்கிழமை பகல் 11 மணிக்குள் தாக்கல் செய்ய அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதுவரை அவருடைய மனு நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சி. பேபி இந்திரா அறிவித்தார்.
    குடியாத்தம்
    குடியாத்தம் (தனி) தொகுதி இடைத் தேர்தலில் 8 பேரின் வேட்புமனுக்கள்  ஏற்கப்பட்டன. இத்தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
    தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ப.நந்தீஸ்வரன் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.  அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன், அதிமுக  வேட்பாளர் ஆர்.மூர்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ரா.கலையேந்திரி, மக்கள் நீதி மய்யம்  வேட்பாளர் ச.வெங்கடேசன், அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி வேட்பாளர் அ. சுப்பிரமணி, அமமுக ஜெயந்தி பத்மநாபன், சுயேட்சைகள் கே.முருகையன், சி.விஜயகுமார் ஆகிய 8 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    சோளிங்கர்
    சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் புதன்கிழமை பரிசீலனை செய்யப்பட்டதில் 16 மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்களின் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai