பாஜக-வின் கொள்கைகள் தமிழகத்துக்கு ஏற்றதாக இல்லை: கே.எம்.காதர் மொகிதீன்
By DIN | Published On : 30th March 2019 01:23 AM | Last Updated : 30th March 2019 01:23 AM | அ+அ அ- |

பாஜக கொள்கைகள் தமிழகத்துக்கு ஏற்றதாக இல்லை என்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பளிப்பதாக இந்தத் தேர்தல் உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காங்கிரஸ் தலைமையில் அமையும் ஆட்சியில் தமிழக கூட்டணியில் வெற்றி பெறும் எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள் என்பது உறுதி.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஏற்பட்டுள்ள கூட்டணி போல் வேறு எந்த மாநிலத்திலும் கூட்டணி அமையவில்லை. இது முன்மாதிரியான கூட்டணி; வெற்றிக் கூட்டணி. பாஜகவின் கொள்கைகள் தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.அப்துல் பாசித், நிர்வாகிகள் இக்பால், முன்னா, அஸ்வாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...