வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பாதுகாப்பு ஒத்திகை

இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர்

இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தேவாலயங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 
இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் நிலையம் மட்டுமின்றி பல்வேறு திரையரங்குகள், தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 
இதன்தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டக் காவல் கண்காணப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். 
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 13 பேர் நடத்திய இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின்போது, வெடிகுண்டுகளைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு நோயாளிகள் வார்டு, வாகன நிறுத்தும் இடம், பொதுமக்கள் வரவேற்பறை போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், மோப்ப நாய் உதவியுடனும் வெடி குண்டு கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு இருப்பது உறுதி செய்யப் பட்டால் நோயாளிகளை எவ்வித பதற்றமுமின்றி பாதுகாப்பாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
இதுகுறித்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் கூறியது: 
வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி பல மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர். அவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் என தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சி மூலம் மருத்துவமனை ஊழியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com