ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்
By DIN | Published On : 15th May 2019 07:09 AM | Last Updated : 15th May 2019 07:09 AM | அ+அ அ- |

அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் ஊராட்சி பாரதிநகர் பனந்தோப்பு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடு கட்டி வருவதாக திருப்பத்தூர் சார்-ஆட்சியருக்கும், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் வந்தது.
அதைத் தொடர்ந்து, சார்-ஆட்சியர் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் உமா ரம்யா மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுடுகாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தசீலன் தலைமையிலான வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.