காணாமல் போனவரின் சடலம் மீட்பு
By DIN | Published On : 15th May 2019 07:12 AM | Last Updated : 15th May 2019 07:12 AM | அ+அ அ- |

ஆற்காடு அருகே வீட்டிலிருந்து காணாமல் போனவரின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
தாஜ்புரா ஊராட்சி தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர், கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றாராம். பின்னர், வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இதுகுறித்து இவரது மனைவி தனலஷ்மி ஆற்காடு கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, செல்வராஜைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தாஜ்புரா அருகே பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று கிணற்றிலிருந்த சடலத்தை மீட்டனர். அதில் சடலமாகக் கிடந்தது செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.