ஏலகிரி, ஜவ்வாது மலை, அமிர்தி வனப்பகுதியில்  மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி, ஜவ்வாது மலை உள்பட 3 இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கு தமிழக வனத் துறை அனுமதி அளித்துள்ளது. 
ஏலகிரி, ஜவ்வாது மலை, அமிர்தி வனப்பகுதியில்  மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி, ஜவ்வாது மலை உள்பட 3 இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கு தமிழக வனத் துறை அனுமதி அளித்துள்ளது. 
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற குழுவினர் காட்டுத் தீயில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 23 பேரில் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் மலையேற்றப் பயிற்சிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சி செல்ல ஏதுவான 114 இடங்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி, ஜவ்வாது மலைகளிலும், அமிர்தி வனப்பகுதியிலும் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக திருப்பத்தூர் வன மாவட்டத்துக்கு உள்பட்ட ஏலகிரி மலையில் பள்ளக்கணியூர் முதல் ஜலகம்பாறை வரை சுமார் 3.5 கி.மீ தூரத்துக்கும், ஜவ்வாதுமலைத் தொடரில் கடகனூர் முதல் அஞ்சத்திஜொனை வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கும் மலையேற்றப் பயிற்சி செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்விரு மலைப்பகுதிகளிலும் மலையேற்றப் பயிற்சி செல்ல இந்தியர்களாக இருந்தால் ஒருநபருக்கு எளிதான வழித்தடத்துக்கு ரூ. 200, மிதமான வழித்தடத்துக்கு ரூ. 350, கடுமையான வழித்தடத்துக்கு ரூ. 500, வெளிநாட்டவராக இருந்தால் எளிதான வழித்தடத்துக்கு ரூ. 1,500, மிதமான வழித்தடத்துக்கு ரூ. 3,000, கடுமையான வழித்தடத்துக்கு ரூ. 5,000 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
மலையேற்றத்தின்போது 5 முதல் 15 பேர் கொண்ட குழுவாகச் செல்லவும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மலையேற்றம் செல்லவும் அனுமதிக்கப்படுவர். மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவ உடற்தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும். 
குழந்தை, கர்ப்பிணிகளுக்கு மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியில்லை. நெகிழி, மதுபானங்கள், புகையிலை உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களும், ஆயுதங்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. விலங்குகளுக்கு இடையூறு செய்யக் கூடாது. வனத் துறையினர் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி செல்வோர் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் பேரிலேயே அனுமதி வழங்கப்பட உள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து திருப்பத்தூர் வன மாவட்ட அலுலவர் ஆர்.முருகன் கூறியது: 
ஏலகிரி, ஜவ்வாது மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி செல்ல அனுமதி அளித்து கடந்த அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது இவ்விரு மலைப் பகுதிகளிலும் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  விருப்பம் உள்ளவர்கள் திருப்பத்தூர் வனச் சரக அலுவலகம், திருப்பத்தூர் வன மாவட்ட அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்தால் அதை பரிசீலித்து மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார் அவர்.

இதேபோல், வேலூர் வன மாவட்டத்துக்கு உள்பட்ட அமிர்தி உயிரியல் பூங்கா முதல் கொட்டாறு வரை சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளைக் கருத்தில் கொண்டு அமிர்தி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு பொதுமக்களை அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
விரைவில் அப்பகுதியிலும் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com