சுடச்சுட

  

  மயானத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு: சார்-ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

  By DIN  |   Published on : 17th May 2019 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராணிப்பேட்டை அருகே மயானத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை, சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  வாலாஜாபேட்டை வட்டம், கல்மேல்குப்பம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியதை அடுத்து அப்பகுதியில் குடிநீர் வசதி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தேவையான செலவை தாங்கள் ஏற்பதாக கல்மேல்குப்பம் கிராம மக்கள் தரப்பில் கூறப்பட்டது.
  இதையடுத்து கல்மேல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்க தேவையான தொகையை வசூலித்து, கன்னிகாபுரம் கிராமத்தில் ஒரு தரப்பினர் பயன்படுத்தும் மயானத்தில் சில நாள்களுக்கு முன் இரவோடு, இரவாக அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கன்னிகாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  இதையடுத்து ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
  இந்நிலையில் கன்னிகாபுரத்தில் உள்ள மயானத்தில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சார்-ஆட்சியர் அலுவலகத்தை கன்னிகாபுரம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்டச் செயலர் எஸ்.கே.மோகன் உள்ளிட்டோர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
  பின்னர், சார்-ஆட்சியர் க.இளம்பகவத்திடம்  மனு அளித்தனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழலை இருப்பதால் கன்னிகாபுரம் கிராம மயானத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை யாரும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கூடாது என சார்-ஆட்சியர் உத்தரவிட்டார்.
  மேலும், கல்மேல்குப்பம் கிராமத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai