பணி நிரந்தரம் கோரி கோழிப் பண்ணை தொழிலாளர்கள் தர்னா

பணி நிரந்தரம் செய்யக் கோரி தனியார் கோழிப் பண்ணைத் தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி தனியார் கோழிப் பண்ணைத் தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
பேர்ணாம்பட்டு வட்டம், பள்ளாளக்குப்பம், கொத்தமாரிகுப்பம், அகரம்சேரி, பொகளூர் ஆகிய இடங்களில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்த 4 பண்ணைகளில் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 
இந்நிலையில், பள்ளாளக்குப்பம், கொத்தமாரிகுப்பம் பண்ணைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் கூறியது: பள்ளாளக்குப்பம், கொத்தமாரிகுப்பம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கும் கோழிப் பண்ணைகளில் மட்டும் 75 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். 
கோழிகளுக்கு தீவனம் அளிப்பது, ஊசி போடுதல், பண்ணை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் எங்களுக்கு தினக் கூலியாக ரூ. 242 வழங்கப்படுகிறது. ஆனால், விடுமுறை ஏதும் அளிப்படுவதில்லை. 
அதேசமயம், அகரம்சேரி, பொகளூர் பண்ணைகளில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சேர்க்கப்பட்ட சில ஆண்டுகளில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினக் கூலியாக ரூ. 342 வழங்கப்படுவதுடன், விடுமுறைகளும் அளிக்கப்படுகின்றன. 
அவர்களைப் போன்று பள்ளாளக்குப்பம், கொத்தமாரிகுப்பம் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். 
அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த மாதம் 10 நாள்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பண்ணை நிர்வாகம் நீதிமன்ற தடையாணை பெற்று போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். 
தொடர்ந்து எங்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தகுதியான தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி ஜெயவேல் கூறியது:
பள்ளாளக்குப்பம், கொத்தமாரிகுப்பம் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 4 ஆண்டுகளு க்கு முன்பு ஒப்பந்த அடிப்படையிலேயே பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை நிரந்தரம் செய்வது குறித்து நிறுவனத்தின் உயரதிகாரிகளே முடிவு செய்வர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com