வாக்கு எண்ணும் அலுவலர்கள் காலை 6 மணிக்கே வர உத்தரவு

மக்களவைத் தேர்தல், பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள்

மக்களவைத் தேர்தல், பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மே 23-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு முன்பாகவே வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. 
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பதிவான வாக்கு இயந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிகளில் "சீல்' வைக்கப்பட்ட அறைகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியது:
வாக்கு எண்ணும் பணியில் இந்த முறை புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கான மேஜை ஒதுக்கீடு மே 23-ஆம் தேதிக்கு முந்தைய நாள் மட்டுமே தெரியவரும். 
இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்கை உறுதிப்படுத்தும் விவி பேட் இயந்திரத்தில் பதிவான வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அங்கு விவி பேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக தனியாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் விவி பேட் இயந்திரத்தில் உள்ள வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் அதற்கேற்ப ஊழியர்கள் தயார் நிலையில் வரவேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் வாக்கு எண்ணும் நாளன்று காலை 6 மணிக்கு முன்பாகவே மையத்துக்குள் வந்துவிட வேண்டும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் மற்றொரு சுற்றுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் பதிவான வாக்குகளை படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதை உதவித் தேர்தல் அலுவலர் கண்காணிக்க வேண்டும். செல்லிடப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜே.பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com