இளைஞரைத் தாக்கிய இருவர் கைது
By DIN | Published On : 23rd May 2019 12:36 AM | Last Updated : 23rd May 2019 12:36 AM | அ+அ அ- |

ஆற்காட்டை அடுத்த கலவையில் இளைஞரைத் தாக்கி விபத்து என நாடகமாடிய 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கலவை செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (41). இவர் வட்டிக்குப் பணம் தரும் தொழில் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சுபேதார் (24), கரிமுல்லா(18) ஆகிய இருவரும் வட்டிக்குப் பணம் வாங்கியதாகக் கூறிப்படுகிறது.
இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கடந்த 17-ஆம் தேதி செங்குந்தர் தெரு அருகே சுபேதார், கரிமுல்லா ஆகிய இருவரும் காமராஜை இரும்புக் கம்பியால் தாக்கினர்.
இதையடுத்து அவர் வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்ததாகக் கூறி அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கலவை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், சுபேதார், கரிமுல்லா ஆகிய இருவரும் காமராஜைத் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.