Enable Javscript for better performance
தக்கோலம் ஆற்றில் இரு சக்கர வாகனங்களில் நடைபெறும் மணல் கடத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தக்கோலம் ஆற்றில் இரு சக்கர வாகனங்களில் நடைபெறும் மணல் கடத்தல்

    By DIN  |   Published On : 27th May 2019 06:33 AM  |   Last Updated : 27th May 2019 06:33 AM  |  அ+அ அ-  |  

    தக்கோலம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கடந்த இரு மாதங்களாக இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. 
    அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் வழியே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இருந்து அரசு உரிமம் இல்லாமல் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் மணல் கடத்தப்படுகிறது. இப்பகுதி திருவள்ளூர் மாவட்ட எல்லையாக இருப்பதால் இங்கு எடுக்கப்படும் மணல், நேரடியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் தக்கோலம் அருகில் உள்ள பகுதியில் இருக்கும் மணல் தரமானதாக இருப்பதால் சென்னையில் இந்த மணலுக்கு விலை அதிகம் எனக் கூறப்படுகிறது.
    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அரக்கோணம் அருகே ஆற்றில் மணல் எடுத்தபோது மணல் சரிந்து ஒருவர் இறந்த சம்பவம், பள்ளூர் அருகே மணல் டிராக்டர் மோதி தந்தையும், மகனும் இறந்த சம்பவங்களைத் தொடர்ந்து வேலூர் எஸ்.பி. மணல் கடத்தலைத் தடுக்க சிறப்பு படையை அமைத்தார். இதனால் தற்போது பகலில் லாரியில் மணல் கடதப்படுவது ஓரளவு குறைந்துள்ளது. எனினும், இரவில் நூற்றுக்கணக்கான லாரிகளில் சென்னையை நோக்கி மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், தக்கோலம் அருகே நூதன முறையில் மணல் கடத்தப்படுவது தொடங்கியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள், சிமெண்ட் பைகளில் மணலை நிரப்பி எடுத்துச் செல்கின்றனர். 
    ஒவ்வொரு முறையும் மூன்று மூட்டைகளைக் கொண்டு செல்லும் இந்த நபர்கள் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை அவ்வாறு எடுத்துச் செல்வதாகத் தெரிகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்படி மணல் எடுத்துச் செல்கின்றனர்.
    அவர்கள் மணல் எடுப்பது அரக்கோணம் நகராட்சியின் நீரேற்றும் நிலையம் அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் இருந்துதான் அரக்கோணம் நகராட்சிக்கு தினமும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. 
    இப்பகுதியில் தொடர்ந்து மணல் எடுக்கப்படுவதால் நீரேற்றும் நிலையத்துக்கு பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
    இது குறித்து அறிந்த அரக்கோணம் நகராட்சி ஆணையர், தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. 
    மாவட்டக் காவல்துறையும், வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலைத் தடுத்து நீரேற்று நிலையத்தைக் காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp