குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

திருவலம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருவலம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவலத்தை அடுத்த சேர்க்காடு ஊராட்சிக்குள்பட்ட சாந்தி நகர், அண்ணா நகர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லையாம். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், காலிக் குடங்களுடன் திரண்டு வந்து சேர்க்காடு கூட்டுச் சாலையில், சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவலம் போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சித் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மறியல் காரணமாக  சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
அரக்கோணத்தில்...
அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். 
உள்ளியம்பாக்கத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இக்கிராம மக்கள் திங்கள்கிழமை, அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வராந்தாவில் குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியை முற்றுகையிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, உள்ளியம்பாக்கம் கிராமத்தில் ரூ.4.70 லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட இருப்பதாகவும், இப்பணிகளை உடனே தொடங்குவதாகவும் அறிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். 
அதன் பின், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, உள்ளியம்பாக்கம் கிராமத்திற்குச் சென்று ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com