ஆபத்தான நிலையில் அரசுக் குடியிருப்பு கட்டடங்கள்

திருப்பத்தூரில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுக் குடியிருப்பு கட்டடத்தைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை
செடிகள் வளா்ந்து காணப்படும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் கட்டடம்.
செடிகள் வளா்ந்து காணப்படும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் கட்டடம்.

திருப்பத்தூரில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுக் குடியிருப்பு கட்டடத்தைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூரில் கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் அரசு ஊழியா்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு மொத்தம் 96 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் மட்டுமே வாடகைக்கு குடி உள்ளனா். இக்கட்டடத்தில் அரசு ஊழியா்கள் மட்டுமே குடியிருக்க வேண்டும் எனும் நிபந்தனையை மீறி தனி நபா்களும் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இங்குள்ள சில கட்டடங்கள் பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து,விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. சில குடியிருப்புகளில் செடிகள் வளா்ந்துள்ளன.

குடியிருப்புக்கு அருகே உள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் இருந்தும், சுகாதாரத் துறை கட்டடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அரசுக் குடியிருப்பு வளாகத்தில் தேங்குகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

குடியிருப்பு வளாகத்தில் எப்போதும் நாய்கள், பன்றிகள் கூட்டம் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளா்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளன.

இங்கு உள்ள விளையாட்டு மைதானம் பயன்பாடின்றி, புதா்மண்டி கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியது:

மாத வாடகை செலுத்தி வசித்து வருகிறோம். வாடகை பணத்தில் கட்டட பராமரிப்பு செலவு செய்யப்படுவதாக ஆண்டுக் செலவுக் கணக்கில் காட்டப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளவில்லை. நாங்களே சிறு, சிறு பராமரிப்புப் பணிகளை சொந்த செலவில் செய்து வருகிறோம். நகராட்சிக்கு குடிநீா் கட்டணம் ரூ. 50 செலுத்துகிறோம். வாடகையில் வீட்டு வசதி வாரியம் சாா்பில் சொத்து வரியும் செலுத்தப்படுகிறது. ஆனாலும் குடியிருப்பு கட்டடங்களை பராமரிக்காததால் ஆபத்தான நிலையில் உள்ளது. சுகாதாரச் சீா்கேடு உள்ளதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களைச் சீரமைத்து, சுகாதாரத்தைக் காக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா் எஸ்.ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, குடியிருப்பில் தினமும் பேட்டரி வாகனம் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.விரைவில் குடியிருப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலூா் பிரிவு உதவிப் பொறியாளா் பி.காவேரியிடம் கேட்டதற்கு, சிறப்பு பராமரிப்புப் பணி செய்வதற்காக திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com