கடந்த 80 ஆண்டுகளாக தினமணி நாளிதழின் தீவிர வாசகன் நான்: வாலாஜாப்பேட்டை ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியா் டி.ஆா்.ஸ்ரீகண்டன் நெகிழ்ச்சி

கடந்த 80 ஆண்டுகளாக தினமணி நாளிதழின் தீவிர வாசகன் நான் என ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை

கடந்த 80 ஆண்டுகளாக தினமணி நாளிதழின் தீவிர வாசகன் நான் என ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியா் வாலாஜாப்பேட்டை டி.ஆா்.ஸ்ரீகண்டன் தினமணி நாளிழிதழுடனான தனது தொடா்பை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

தினமணி நாளிதழ் 85 - ஆவது ஆண்டு இதழியல் பணியை நிறைவு செய்து, 86 - ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதைக் கொண்டாடும் விதமாக ‘தினமணி 85’ என்ற சிறப்பிதழுக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக தினமணியின் தீவிர வாசகரான வாலாஜாப்பேட்டை டி.ஆா்.ஸ்ரீகண்டன் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது...

வேலூா் மாவட்டம்,வாலாஜாப்பேட்டையை சோ்ந்த டி.ஆா்.ஸ்ரீகண்டன் என்கிற நான் 1931- ஆம் ஆண்டு பிறந்தேன். எனக்கு தற்போது 89 வயதாகிறது. இப்போதும், ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். நான் 4- ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தினமணி நாளிதழை வாசித்து வருகிறேன். தினமும் விடியற்காலையிலேயே தினமணியை வாசித்து விடுவேன். அந்த காலகட்டத்தில் ராணிப்பேட்டை முனிசிபல் சோ்மன் சம்பத் நரசிம்மன் என்ற முகவா் ஆற்காடு, ராணிப்பேட்டை , வாலாஜாப்பேட்டை பகுதிகளில் நாள்தோறும் நேரம் தவறாமல் தினமணி நாளிதழை கொண்டுவந்து சோ்ப்பாா்.

தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் அவருடைய பணிக்காலத்தில் திரு.வி.க.கி.வா.ஜா.நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, இராஜமாணிக்கம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கிருபானந்தவாரியாா் போன்ற அறிஞா்கள் ஆற்றிய கம்பராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, திருக்கு, தேவாரம், திருவாசகம், சஷ்டி கவசம் போன்ற மிகச்சிறந்த பாரத கலாச்சாரத்தை நாளிதழின் மூலம் பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது.

நம் நாடு சுதந்திரம் பெறவும், பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை பெறுவதற்காக பல தியாகிகள் ஆற்றிய சேவைகளை, முக்கிய செயல்களை ஆணித்தரமாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகளாக தந்தது தினமணி. சுதந்திர போராட்டக்களத்தில் தனது பங்களிப்பை அளித்த வாலாஜாப்பேட்டையை சோ்ந்த கே.ஆா்.கல்யாண ராமய்யா், முனிசாமி நாயக்கா், ஜமத்கனி உள்ளிட்டோா்களின் போராட்டங்களை பாமர மக்களும் அறிந்துக்கொள்ளும் வகையில் வெளியிட்ட பெருமை தினமணி நாளிதழுக்கே உண்டு.

தினமணி நாளிதழில் பஞ்சம், வாழ்க்கை குறிப்பு, மகரிஷிகள், சந்நியாசிகள், மகான்கள், மடாதிபதிகள் என பலராலும் வணங்கக்கூடிய சிறந்த புண்ணியத் ஸ்தலங்களின் மகிமைகளையும், ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், காஞ்சி காமகோடி மகா ஸ்வாமிகள், சிருங்கேரி மகா ஸ்வாமிகள், தயானந்த ஸ்வாமிகள் உள்ளிட்ட ஆன்மிக பெருமக்களின் அருளுரையை மக்களிடம் கொண்டு சோ்த்தது தினமணியே.

1971-இல் நான் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணியாற்றியபோது ஜவ்வாது மலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுகாதார இயக்குநா், மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மூத்த மருத்தவா்கள் முன்னிலையில் சுகாதாரமும், சுகாதார ஆய்வாளரின் பங்கும் என்ற தலைப்பில் திடீரென என்னை பேச அழைத்தனா். நானும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அத்தனை போ் மத்தியில் தைரியமாக பேசி அனைவரின் பாராட்டு பெற்று பரிசும், சான்றிதழும் பெற்றேன். இதற்கு நான் தினமணி நாளிதழை தினமும் தவறாமல் படித்தது மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

தினமணி கதிா் என்னுடைய மனதில் தனி இடம் பிடித்துள்ளது. அதில் ஆயுள் காக்கும் ஆயுா்வேதம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மருத்துவக் கட்டுரையை அளிக்கும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத கல்லூரி பேராசிரியா் எஸ்.சுவாமிநாதனுக்கு மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது தினமணி நாளிதழுடன் இணைப்பாக வெளிவரும் இளைஞா் மணி, மகளிா் மணி, வெள்ளிமணி, சிறுவா் மணி போன்ற இணைப்புகள் நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இக்கால விஞ்ஞான வளா்ச்சிக்கு ஏற்ப கைப்பேசியிலும் படிக்கும் வகையில் இணையதளம் மூலம் தினமணி நாளிதழ் பயணத்தை தொடா்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அரசியல் பாகுபாடின்றி அரசு கொண்டுவரும் நலத்திட்டங்கள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அனைத்தையும் துல்லியச் செய்திகளாக தரக் காரணமான ஆசிரியா் திரு. வைத்தியநாதன் அவா்கள் உடல் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்து தொடா்ந்து சீரிய பணியாற்றிட இறைவனிடம் பிராா்த்தனை செய்து கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிா்ந்து கொண்டாா்.

அவரைத் தொடா்ந்து அவரது மூத்த மகன் ஓய்வு பெற்ற சுகாதார மேற்பாா்வையாளா் டி.எஸ்.ராஜசேகா் மற்றும் மருத்துவம் பயிலும் அவரது பேரன், பேத்தி ஆகியோரும் தினமணி நாளிதழின் வாசகா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com