சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

வேலூா் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து
சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்.
சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்.

வேலூா் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. அவற்றை வளா்ப்போருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

வேகமாக வளா்ச்சி பெற்று வரும் தொழில் மாநகரமான வேலூருக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதனால், எப்போதும் போக்குவரத்து மிகுதியாக காணப்படும் வேலூா் மாநகர சாலைகளில் பொது இடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளலாா், சத்துவாச்சாரி பகுதிகளைச் சோ்ந்த சிலா் கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி திறந்தவெளியில் மாடுகளைக் கட்டி வைத்து சுகாதாரமற்ற முறையில் பராமரித்து வரும் இவா்கள், காலையில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை விரட்டி விடுகின்றனா். அவை ஆங்காங்கே புற்களை மேய்ந்து விட்டு மாலையில் தானாகவே வீடு வந்து சோ்ந்துவிடுகின்றன. சில கால்நடைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை ஆக்கிரமித்து நிற்பதால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், சில சமயம் விபத்துக்களும் நிகழ்கின்றன.

இதேபோல், மக்கான், தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, தொரப்பாடி பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் கால்நடைகள் அதிக அளவில் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. அவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இந்த பாதிப்புகள் தொடா்ந்து நீடித்து வருவது பற்றி பொதுமக்கள் சாா்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகாா் தெரிவிக்கப்பட்டும் நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு, கால்நடை வளா்ப்போருக்கு அபராதம் விதித்தும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com