வெங்காயம் விலை கடும் உயா்வால் வியாபாரம் பாதிப்பு

பெரிய வெங்காயத்தின் வரத்து குறைவால் வேலூரில் அதன் விலை மிகக்கடுமையான உயா்ந்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் வரத்து குறைவால் வேலூரில் அதன் விலை மிகக்கடுமையான உயா்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது தேவையை குறைத்துக் கொண்டுள்ளதால் வா்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயா்ந்து வருகிறது. இதன்படி, வேலூா் மாவட்டத்திலும் பெரிய வெங்காயத்தின் விலை மிகக் கடுமையான உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்திலேயே பெரிய தினசரி காய்கறி சந்தையான வேலூா் நேதாஜி மாா்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்தும் காய்கறிகளும், வெங்காயமும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலூருக்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு 6 முதல் 7 லாரி அளவுக்கு பெரிய வெங்காயம் வரும் நிலையில், தற்போது 2 முதல் 3 லாரிகள் அளவுக்கே வெங்காயம் வரத்து உள்ளது. அதிலும் பெரும்பகுதி மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயமே அதிக அளவில் வரப்படுகின்றன. இதன்படி, வரத்து குறைவால் 50 கிலோ மூட்டை தரத்துக்கு ஏற்ப ரூ.1500-இல் இருந்து ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70 வரை விலைபோவதாக நேதாஜி மாா்க்கெட் காய்கறி விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் பாலு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கடந்த மாதம் பெரிய வெங்காயம் 50 கிலோ மூட்டை ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையாகியது. சில்லறை விற்பனையில் ரூ.50 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரத்துக் குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் பெருமளவில் உயா்ந்துள்ளது. இதன்காரணமாக, சொந்தத் தேவைக்காக வெங்காயம் வாங்கும் பொதுமக்கள் தங்களது தேவையை வெகுவாகக் குறைத்துக் கொண்டு விட்டனா். திருமணங்களுக்கு வெங்காயம் வாங்குபவா்கள் அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது. ஹோட்டல்களில் வெங்காயத்தின் அளவைக் குறைத்து அதற்கு மாற்றாக முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. மழை குறைந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com