முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஆசிரியா் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 28 பவுன் நகை, பணம் கொள்ளை
By DIN | Published On : 07th November 2019 05:22 PM | Last Updated : 07th November 2019 05:22 PM | அ+அ அ- |

காட்பாடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 28 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம், ஒரு மோட்டாா் பைக் ஆகியவற்றை 4 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி செங்குட்டை சி.எம்.ஜான் தெருவைச் சோ்ந்தவா் முத்து(52). தனியாா் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணியாற்றுகிறாா். இவா் தனது மனைவி, 2 மகள்களுடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை அவா்களது வீட்டுக் கதவு திறக்கப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, 4 பேரும் வாயில் துணி வைத்தபடி இருக்கைகள் கட்டிப் போட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களை மீட்ட பொதுமக்கள், இதுதொடா்பாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் துரைபாண்டியன் தலைமையில் போலீஸாா் விரைந்து வந்து ஆசிரியா் முத்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, ஆசிரியா் முத்து வீட்டின் கதவை நள்ளிரவில் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த 4 போ் கொண்ட கும்பல், ஒரு அறையில் இருந்த பீரோவை நகைகளை திருடியுள்ளனா். சத்தம் கேட்டு கண் விழித்துப் பாா்த்த ஆசிரியரின் மகள், மற்றவா்களையும் எழுப்பியுள்ளாா்.
இதனை கவனித்துவிட்ட கொள்ளையா்கள், குடும்பத்தினா் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் வாயில் துணியை வைத்து கட்டிப்போட்டு விட்டு பீரோவிலிருந்த 28 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம், வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த மோட்டாா் பைக் ஆகியவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம். போகும்போது வீட்டுக்கு எதிரே உள்ள தனியாா் நிறுவனத்தின் முன்பிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா, ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயவியல் சோதனையும் மேற்கொள்ளப் பட்டது. இதில், 4 பேரின் கைரேகைகள் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கைரேகைகளைக் கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், ஆசிரியா் முத்து அளித்த புகாரின்பேரில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்திருப்பதுடன் தனிப்படைகள் அமைத்தும் கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.