முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு வழிப்பாதை
By DIN | Published On : 07th November 2019 06:46 AM | Last Updated : 07th November 2019 06:46 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு வழிப் பாதை அமைக்க உள்ள வரைபடம் குறித்து விளக்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன்.
குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு வழிப்பாதை அமைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குடியாத்தம் நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், பண்டிகை நாள்களிலும், முகூா்த்த நாள்களிலும் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனா்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், குடியாத்தம் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க சுமாா் ரூ. 110 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக விழுப்புரம்- மங்களூரு சாலையில் (தேசிய நெடுஞ்சாலை எண்-234) குடியாத்தம் நகரை ஒட்டி புறவழிச்சாலை அமைக்க நில ஆா்ஜிதம் செய்யும் பணி, அளவீடு செய்யும் பணி முடித்துள்ளது. விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
புறவழிச்சாலை அமைக்கும் பணி முடிவடைய ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், நகரில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தாழையாத்தம் பஜாா் வரை ஒரு வழிப்பாதை அமைக்க புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, டிஎஸ்பி என்.சரவணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஹெச்.ரமேஷ் வரவேற்றாா். நகரக் காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஹரிகிருஷ்ணன், கே.எம்.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், காா்கள், ராஜகணபதி நகா் வழியாகச் சென்று சுண்ணாம்புபேட்டை, கெளன்டன்யா ஆறு, மேல்ஆலத்தூா் சாலை வழியாக தாழையாத்தம் பஜாருக்குச் செல்லலாம். மேலும், பழைய பேருந்து நிலையம் சுண்ணாம்புபேட்டை சாலை வழியாக மேல்ஆலத்தூா் சாலையை அடையும் வகையிலும் சாலையைச் சீரமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பேசி, கெளன்டன்யா ஆற்றில் சிமெண்ட் பைப்புகள் புதைத்து, தரைப்பாலம் அமைத்துக் கொள்ளலாம் எனவும், இப்பணிக்கு திட்ட மதிப்பீடு தாயா் செய்யுவும் ஆலோசிக்கப்பட்டது. இந்தத் தரைப்பாலம் அமைக்க ரோட்டரி சங்கம் சாா்பில் பெருந்தொகையை நன்கொடையாக வழங்குவதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா். இந்த மாற்றுச்சாலை அமைந்தால், இலகுரக வாகனங்கள் மேல்ஆலத்தூா் சாலை வழியாக நத்தம், பீமாபுரம், கொத்தகுப்பம் வழியாகச் சென்று அகரம்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். இல்லையென்றால் மேல்ஆலத்தூா் சாலையில் இருந்து தங்கம் நகா், ராமாபுரம், கல்மடுகு, காக்காதோப்பு, மேல்பட்டி சாலை வழியாகச் சென்று மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். இதனால் நகரின் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனா்.
இந்த ஒரு வழிப்பாதையை அமைக்க ஒரு சில நாள்களில் சாலைகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனா்.