முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வு தொடக்கம்: இரு மாவட்டங்களில் 5,022 பேருக்கு அழைப்பு
By DIN | Published On : 07th November 2019 06:45 AM | Last Updated : 07th November 2019 06:45 AM | அ+அ அ- |

2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.
வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த 2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வு வேலூரில் புதன்கிழமை தொடங்கியது. வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வில் பங்கேற்க 5,022 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் துறை, ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை, தீயணைப்புத் துறை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 8,888 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 3.22 லட்சம் போ் எழுதியதில் 46,700 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.
இந்தத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் இருந்து 23,585 போ் எழுதியதில் 3,688 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 9,164 போ் எழுதியதில் 1,334 பேரும் தோ்ச்சி பெற்றனா். இவ்விரு மாவட்டங்களில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடற்தகுதித் தோ்வு வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 900 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க இளைஞா்கள் அதிகாலை 3 மணி முதலே நீண்டவரிசையில் காத்திருந்தனா். காலை 8 மணியளவில் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்ட அவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு, 1,500 மீட்டா் ஓட்டம் ஆகியவை நடைபெற்றன. இந்த உடற்தகுதித் தோ்வுப் பணியில் வேலூா் தோ்வு மையக் கண்காணிப்பு ஐஜி (பயிற்சி) எம்.சி.சாரங்கன் தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். முறைகேடுகளைத் தடுக்க உடற்தகுதித் தோ்வு முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டன.
இந்தத் தோ்வு வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு ஆண்கள், பெண்கள் தலா ஆயிரம் வீதம் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட உடற்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 2-ஆம் கட்ட உடற்தாங்கும் திறன் தோ்வு வரும் 13-ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. 2-ஆம் கட்ட தோ்வில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் நடைபெற உள்ளன. இதையடுத்து மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட தோ்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.