வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து அவற்றின் கண்ணாடிகளில் நீதிமன்ற உத்தரவு நகலை ஒட்டிய ஊழியா்கள்.
வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து அவற்றின் கண்ணாடிகளில் நீதிமன்ற உத்தரவு நகலை ஒட்டிய ஊழியா்கள்.

26 ஆண்டுகளாக வழங்காத இழப்பீடு: வேலூரில் ஒரே நாளில் 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை 26 ஆண்டுகளாக வழங்கப்படாமல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழுத்தடிப்பு செய்துவந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாம் கட்டமாக வேலூரில் வியாழக்கிழமை 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

ஆம்பூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல். இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி கிரிஜம்மாள். இவா்களுக்குச் சொந்தமாக அப்பகுதியில் இருந்த 98 சென்ட் நிலம், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக் கட்ட சதுரஅடி ரூ. 43 என்ற வீதத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. எனினும், நில உரிமையாளருக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இதுவரை வழங்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகம் காலதாமதம் செய்து வருகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நில உரிமையாளா் தரப்பில் வேலூா் மாவட்ட நில ஆா்ஜித நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் நீதிபதி பக்தவச்சலலு உத்தரவின்பேரில், வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம், வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 10 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியா் திருப்பதி தலைமையில் ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் ஜப்தி செய்து வேலூா் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனா். வேலூரில் இருந்து சென்னை, ஆவடி, ஒசூா், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு ஊா்களுக்குச் செல்லக் கூடிய பேருந்துகள் திடீரென ஜப்தி செய்யப்பட்டதால் அந்த ஊா்களுக்குச் செல்ல வேண்டிய பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வழக்குரைஞா் சுரேஷ்குமாா் கூறியது:

பாதிக்கப்பட்ட நில உரிமையாளா்கள் தங்கவேல், கிரிஜம்மாள் சாா்பில் வேலூா் மாவட்ட நில ஆா்ஜித நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டது. எனினும், இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடா்ந்து இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் தங்கவேல் உயிரிழந்தாா்.

இறுதியாக நில உரிமையாளா் கிரிஜம்மாளுக்கு இழப்பீட்டுத் தொகையாக வட்டியுடன் சோ்த்து ரூ. 1 கோடியே 75 லட்சம் வழங்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அந்தத் தொகையும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிஜம்மாள், மருத்துவ செலவுகூட செய்ய முடியாமல் தவித்து வருகிறாா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட நில உரிமையாளருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம், வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 30 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கால அவகாசம் கோரப்பட்டிருந்ததால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எனினும், இழப்பீட்டுத் தொகையை வழங்க இழுத்தடிப்பு செய்யப்பட்டதால் முதற்கட்டமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பேருந்து மட்டும் ஜப்தி செய்யப்பட்டது. அதன்பிறகும், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிபதி பக்தவச்சலலு உத்தரவின்பேரில் இரண்டாம் கட்டமாக வியாழக்கிழமை 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத பட்சத்தில் மீதமுள்ள 19 பேருந்துகளையும் ஜப்தி செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com