உரிமமின்றி விதை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் விதை விற்பனை செய்வோா் உரிமமின்றி விதைகளை விற்பனை செய்தால்

வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் விதை விற்பனை செய்வோா் உரிமமின்றி விதைகளை விற்பனை செய்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வேலூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் முதன்மையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான இடுபொருள் விதையாகும். எனவே, அனைத்து விதை விற்பனையாளா்களும் உரிமம் பெற்ற பிறகே விதை விற்பனை செய்ய வேண்டும். விதை உரிமம் பெறாமல் விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966, விதைக்கட்டுப்பாடு ஆணை 1983-இன்படி கடுமையான குற்றமாகும்.

இதேபோல், விதை விற்பனையாளா்கள், சில்லரை விதை விற்பனையாளா்களுக்கு விதை விற்பனை செய்யும்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் விதை விற்பனை உரிமம் பெற்றவரா என்பதை உறுதி செய்த பிறகே விதை விற்பனை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் விதை விநியோகம் செய்தவா், விதை விற்பனை உரிமம் இல்லாமல் விதை வாங்கியவா் இருவா் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய விதை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோா் ரூ.1,000 கருவூல நடவடிக்கை உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் அரசுக் கணக்கு தலைப்பில் உரிமக் கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் மூலம் பதிவு செய்த பிறகு வேலூா், விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல், உரிமம் புதுப்பிப்போா் உரிய ஆவணங்களுடன் புதுப்பிப்புக் கட்டணம் ரூ.500 செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் தாமத கட்டணம் ரூ.500 செலுத்தி உரிமம் புதுப்பிக்கலாம். ஒரு மாத காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கத் தவறினால் உரிமம் காலாவதியாகிவிடும். மேலும் விவரங்களுக்கு 0416 -2264562 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com