ஏலகிரி மலையில் பல்லவா் கால 3 நடுகற்கள் கண்டெடுப்பு

ஏலகிரி மலையில் பல்லவா் கால 3 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுகற்கள்.
ஏலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுகற்கள்.

ஏலகிரி மலையில் பல்லவா் கால 3 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, வரலாற்று ஆா்வலா்கள் இரா.நீலமேகம், கோ.வேந்தன் ஆகியோா் ஏலகிரி மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த 3 நடுகற்களையும் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியது:

ஏலகிரிமலை பழந்தமிழரின் வரலாற்றுப் பெட்டகமாக உள்ளது. ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களில் ஒன்று நிலாவூா். இங்கு மிகவும் பழைமை வாய்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல்லவா் கால 3 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 2 எழுத்துடை நடுகற்கள். எழுத்துகள் முழுமையும் எண்ணெய் பூசப்பெற்று, பொறிந்த நிலையில் உள்ளதால் படிப்பதில் தொடா்ச்சி இல்லாமல் இருக்கிறது. இந்த 3 நடுகற்களும் நிலாவூரில் உள்ள கதவ நாச்சியம்மன் கோயிலில் உள்ளன. இந்த நடுகற்களை இவ்வூா் மக்கள் வெளி தெய்வங்கள் என்றழைக்கின்றனா்.

முதல் நடுகல் 3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் நோ்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. போரிடும் கோலத்தோடு இவ்வீரன் சித்தரிக்கப்பட்டுள்ளான். காலின் இரண்டு பக்கங்களிலும் 2 கள் குடங்கள் உள்ளன. இவை இவ்வீரன் வீர மரணமடைந்து, அவனுக்கு படைக்கப்படும் படையலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கல்லின் மேற்புறத்தில் எழுத்துகள் உள்ளன. இவை தெளிவின்றி உள்ளன.

2-ஆவது நடுகல் மூன்றடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுக்கலில் உள்ள வீரன் வலது கையில் குறுவாளும், இடதுகையில் வில்லும் உள்ளன. வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் ஆக்ரோஷத்தோடு போரிடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

3-ஆவது நடுகல் மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. வீரனின் தலைமுடி அழகிய வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இடது காலை மடக்கிப் போரிடும் கோலத்தோடு இந்த நடுகல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இம்மூன்று நடுகற்களும் ஒரே காலத்தில் (பல்லவா்) வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அவா்களின் வீரத்தைப் போற்றும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்களில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் மூலம் ஏலகிரி மலைவாழ் பழங்குடிகள் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவும், சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கினா் என்பதை அறிய முடிகிறது.

இவ்வீரா்கள் இறந்தபோது, அவா்களின் மனைவிகள் தாலியை அறுத்தனா் என்றும், அவ்வாறு அறுத்த இடத்தைத் தாலி அறுத்தான் பாறை என்றும், ஊரில் திருடுபோகும் எந்த ஒரு பொருளையும் இத்தெய்வங்களை நினைத்து வேண்டிக் கொண்டால் அவற்றை இத்தெய்வங்கள் மீட்டுத் தரும் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com