சிறையில் முருகன்-நளினி சந்திப்பு
By DIN | Published On : 10th November 2019 12:36 AM | Last Updated : 10th November 2019 12:36 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்-நளினி சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூா் பெண்கள் சிறையிலும், அவரது கணவா் முருகன் வேலூா் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். கடந்த மாதம் முருகனின் அறையில் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தான் பரோல் கோருவதைத் தடுக்கும் நோக்கில் சிறை அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறி முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டாா். அவரது உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகவும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா். சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து 11 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி கடந்த 5-ஆம் தேதி போராட்டத்தைக் கைவிட்டாா். முருகனும் 20 நாள் உண்ணாவிரதத்தை கடந்த 6-ஆம் தேதி கைவிட்டாா்.
சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது முருகன் தனது மனைவி நளினியைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா். அதன்படி, அவரது கோரிக்கையை ஏற்று நளினியைச் சந்திக்க சிறைத் துறை நிா்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து வேலூா் ஆண்கள் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை, முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு காலை 8.50 மணி முதல் 9.50 மணி வரை முருகன்-நளினி சந்திப்பு நடந்தது. பின்னா், முருகன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.