முகுந்தராயபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

போக்குவரத்துக்கு தகுதியில்லாமல் காணப்படும் முகுந்தராயபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகுந்தராயபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

போக்குவரத்துக்கு தகுதியில்லாமல் காணப்படும் முகுந்தராயபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தென்னக ரயில்வே என்பது சுதந்திர இந்தியாவில், ரயில்வே நிர்வாகத்தின் 16 மண்டலங்களில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாகும். தென்னக ரயில்வேயின் கீழ் ஆறு கோட்டங்கள் இயங்குகின்றன. இதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்மை இருப்புப் பாதை வழித்தடங்களில் ஒன்றான சென்னை - கோயம்புத்தூர் மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் வழித்தடமாக உள்ளது. இந்த ரயில் தடம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
 இந்த வழித்தடத்தில் வாலாஜா ரோடு - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வடக்கில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் மகா ரத்னா அந்தஸ்து பெற்ற பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தின் பாய்லர் உற்பத்தி தொழிற்சாலையும், தெற்குப் பகுதியில் அத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊரக குடியிருப்பு வளாகமும் அமைந்துள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
 இந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, சிப்காட் தொழிற்பேட்டை தொழிலாளர்கள் மற்றும் நரசிங்கபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் முகுந்தராயபுரம் ரயில் நிலையம் வழியாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
 முகுந்தராயபுரம் ரயில் நிலைய இருப்புப் பாதையின் கீழ் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைந்துள்ளன. ஒரு சுரங்கப் பாதை வழியானது பாரத மிகுமின் நிறுவன தொழிலாளர்கள் நேரடியாக தாங்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து தொழிற்சாலையின் பிரதான நுழைவு வாயிலுக்கு செல்லும்படி அமைந்துள்ளது. அதற்கு அருகே மற்றொரு சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதை வழியாகச் பொதுமக்கள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் நோக்கில் அக்ராவரம் - திருவலம் இணைப்பு சாலைக்கு செல்லும்படி பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
 இந்நிலையில், இந்த ரயில்வே சுரங்கப் பாதை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பள்ளங்கள் விழுந்து தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாதபடி மாறிவிட்டது. அதைத் தொடர்ந்து, "சுரங்கப் பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தவும்' என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
 எனினும், பல மாதங்களாக சீரமைப்புப் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், லாலாப்பேட்டை, அக்ராவரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரயில் நிலையத்துக்கு மாற்றுப் பாதையில் செல்ல பல கி.மீ. தூரம் சுற்றியபடி செல்லும் நிலை உள்ளது.
 இதன் காரணமாக அவ்வழியாக ரயில் நிலையத்துக்கு சென்று வரும் வாகன ஓட்டிகள், பெல் ஊரக குடியிருப்பில் செயல்பட்டுவரும் டி.ஏ.வி. மற்றும் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
 எனவே தென்னக ரயில்வே துறையின் சென்னை கோட்ட நிர்வாகத்தினர் இந்த ரயில்வே சுரங்கப் பாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com