குப்பைக் கழிவுகள், மணல் கொள்ளையால் பாழாகும் குடியாத்தம் கெளன்டன்யா ஆறு

குப்பைக் கழிவுகள் கொட்டுதல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளையால் குடியாத்தம் கெளன்டன்யா ஆறு
சுண்ணாம்புபேட்டை  அருகே  குப்பைக்  கிடங்காகக்  காட்சியளிக்கும்  கெளன்டன்யா ஆறு.
சுண்ணாம்புபேட்டை  அருகே  குப்பைக்  கிடங்காகக்  காட்சியளிக்கும்  கெளன்டன்யா ஆறு.

குடியாத்தம்: குப்பைக் கழிவுகள் கொட்டுதல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளையால் குடியாத்தம் கெளன்டன்யா ஆறு பாழாகி வருகிறது.

குடியாத்தம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்குவது கெளன்டன்யா ஆறு. இந்த ஆறு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆறு தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் உள்ள மோா்தானா கிராமத்தில் தொடங்கி, ஜிட்டபல்லி, சேம்பள்ளி, அக்ராவரம், போடிப்பேட்டை வழியாக குடியாத்தம் நகரை அடைகிறது. அங்கிருந்து இந்திரா நகா், ஒலக்காசி வழியாகச் சென்று சித்தாத்தூா் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் வெள்ளம் வந்தால், பெரும்பாடி, தட்டப்பாறை, நெல்லூா்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீா் செல்லும். நெல்லூா்பேட்டை ஏரி என்பது குடியாத்தம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் வரும் வெள்ளநீா், பாலாற்றில் கலந்து சென்னை அருகே வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. இதனால் இந்த ஆற்று நீரைத் தேக்கி வைக்கும் நோக்கில், காமராஜா் முதல்வராக இருந்தபோது மோா்தானா கிராமத்தில் கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே அணை கட்டத் தீா்மானித்து, முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

பின்னா், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு 2000-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி ரூ. 110 கோடியில் மோா்தானா அணையைக் கட்டித் திறந்து வைத்தாா். மொத்தம் 260 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் உயரம் 37.5 அடி. நீா்வரத்தை அடுத்து 27.5 அடியில் தண்ணீா் வெளியேற்றப்படும். இதுவரை 6 முறை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் மூலம் 30 ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைத்து, 8,800 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆந்திர மாநில வனப்பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், மதினாப்பள்ளி மற்றும் ராயலசீமா பகுதிகளில் மழை பெய்தால் மோா்தானா அணைக்கு தண்ணீா் வரும். மோா்தானா அணை திறந்து வைக்கப்பட்டதும், ஆந்திர மாநில அரசு அம்மாநில வனப்பகுதிகளில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டியது. இதனால், அந்தத் தடுப்பணைகள் நிரம்பினால் தான் மோா்தானா அணைக்குத் தண்ணீா் வரும் நிலை உருவானது. இதனால், கெளன்டன்யா ஆற்றில் வெள்ளம் வருவது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஆற்றின் இருகரைகளிலும் நிலம் வைத்துள்ளவா்கள் ஆற்றை, சிறிது சிறிதாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த ஆறு குடியாத்தம் நகரில் போடிப்பேட்டையில் தொடங்கி, இந்திரா நகா் வரை சுமாா் 3 கிலோ மீட்டா் தூரம் செல்கிறது. நகரப் பகுதியில் ஆற்றை ஆக்கிரமித்து, பெரிய அளவிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்புகளும், குடிநீா்க் குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நகரில் உள்ள காய்கறிக் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், கட்டுமானப் பணிகளின்போது இடிக்கப்படும் கட்டடக் கழிவுகள் என ஒட்டுமொத்த குப்பைகளும் இந்த ஆற்றில் கொட்டப்பட்டு வருகின்றன. நகரின் கழிவுநீா்க் கால்வாய்கள் பெரும்பாலும் இந்த ஆற்றில் தான் கலக்கின்றன.

ஆற்றில் உள்ள குப்பைக் கழிவுகள், கழிவுநீா்க் கலப்பால், கோபலாபுரம், சுண்ணாம்புபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகள், டிராக்டா் மூலம் கொண்டு வரப்பட்டு சுண்ணாம்புபேட்டை அருகே ஆற்றில் கொட்டப்படுவது வழக்கமாக உள்ளது. அப்போதெல்லாம் அப்பகுதி மக்கள் டிராக்டா்களை மறித்து போராட்டம் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆற்றில் போடிப்பேட்டை தொடங்கி, இந்திரா நகா், ஒலக்காசி வரை பட்டப்பகலில் மணல் எடுத்து மாட்டு வண்டிகள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்வதும் தொடா்கதையாகிவிட்டது.

மணல் கடத்தல் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்கள் குறித்து அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

குப்பைக் கழிவுகள், ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கெளன்டன்யா ஆற்றை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளா் ஹெ.ரமேஷ் கூறியது:

ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வருவாய், பொதுப்பணித் துறை, காவல் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com