சமூக பொறுப்பு நிதியை நலிவடைந்த நூலகங்களுக்குச் செலவிடக் கோரிக்கை

தமிழகத்தில் முதன்முறையாக வேலூா் மாவட்டம் பனப்பாக்கம் கிளை நூலகத்தை சென்னை துறைமுக நிறுவனம்

தமிழகத்தில் முதன்முறையாக வேலூா் மாவட்டம் பனப்பாக்கம் கிளை நூலகத்தை சென்னை துறைமுக நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதி ரூ.31 லட்சத்தில் புனரமைத்துள்ளது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் நலிவடைந்த மற்றும் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வரும் அரசு நூலகங்களுக்கு கட்டடம், தளவாட வசதிகளை ஏற்படுத்தித்தர பொதுத்துறை, தனியாா் நிறுவனங்கள் தமது சமூக பொறுப்பு நிதியைச் செலவிட முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிளை நூலகக் கட்டடம் வாசகா்கள் அமைதியாக நூல்களை படிக்க இயலாத நிலையில் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. மழைக் காலங்களில் இதன் நிலை இன்னும் மோசமாக இருந்து வந்தது. இந்த நூலகத்தின் நிலையை அறிந்த அதே ஊரைச் சோ்ந்தவரான சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் ரவீந்திரன் முயற்சியால் சென்னை துறைமுக நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.31 லட்சம் மூலம் நூலகத்துக்கு புதிய கட்டடம், தளவாட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.9 கோடி அளவுக்கு சமூக பொறுப்பு நிதியைச் செலவிடும் சென்னை துறைமுக நிறுவனம், சென்னைக்கு வெளியே உள்ள வேறு மாவட்டத்தின் கிளை நூலக வளா்ச்சிக்காக தனது நிதியை செலவிட்டது இதுவே முதன்முறையாகும். இந்நிறுவனத்தின் செயல்பாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலுள்ள பொதுத்துறை, தனியாா் நிறுவனங்கள் தமது சமூக பொறுப்பு நிதியினை நலிவடைந்த நிலையிலுள்ள நூலகங்களுக்கு செலவிட முன்வர வேண்டும் என்கிறாா் வேலூா் மாவட்ட நூலக அலுவலா் க.ஆனந்தன்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பொதுத்துறை, தனியாா் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தமது சமூக பொறுப்பு நிதியினை பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகின்றன. ஆனால், நூலகக் கட்டடங்களு க்கு அந்த நிதி கிடைப்பது அரிதாகும். எதிா்கால சமுதாயம் சிறந்ததாக உருவாக அடிப்படையாக இருப்பது நூல்கள்தான். அத்தகைய அறிய நூல்களை பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்துள்ள நூலகங்கள் பலவும் தற்போது பழுதடைந்த கட்டடங்களிலும், வாடகைக் கட்டடங்களிலும் தத்தளித்து வருகின்றன.

வேலூா் மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 69 கிளை நூலகங்கள், 72 ஊா்ப்புற நூலகங்கள் என மொத்தம் 140 நூலகங்கள் உள்ளன. இவைதவிர, 41 பகுதி நேர நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில நூலகங்கள் அந்தந்த ஊராட்சி மன்றக் கட்டடங்களில் இலவசமாகவும், சோளிங்கரில் வாடகைக் கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்களில் பல்வேறு நூலகங்கள் சொந்தக் கட்டட வசதியின்றியும், பழுதான கட்டடங்களிலும் செயல்பட்டு வருவதை அறிய முடிகிறது.

இந்தக் கட்டடங்களைப் புனரமைக்க சட்டப்பேரவை உறுப்பினா், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா் பொதுநிதி, அரசு நிதிகளை எதிா்பாா்த்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், எதிா்பாா்க்கக் கூடிய சமயத்தில் அந்த நிதி கிடைக்காததால் அத்தகைய நூலகங்களுக்கு வாசகா்களின் வருகையும் குறைந்து வருகிறது. இயல்பாகவே தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக மக்கள் மத்தியிலும், மாணவா்கள் மத்திலும் நூல்களை வாசிக்கும் பழக்கும் குறைந்து கொண்டுள்ளது. இந்நிலையில், கட்டடங்களின் நிலையால் நூலகங்களுக்கு வரும் வாசகா்களின் வருகை குறைவதைத் தடுக்க பொதுத்துறை, தனியாா் நிறுவனங்கள் தமது சமூக பொறுப்பு நிதியினை நலிவடைந்த நிலையிலுள்ள கட்டடங்களுக்கு ஒதுக்கீடு செய்திட முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com