குடியிருப்புப் பகுதியில் அமிலம் தயாரிப்பதால் உடல்நல பாதிப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழில்கூடத்திலிருந்து அமிலத் தயாரிப்பு, காஸ்டிக் சோடா கழிவுகள் வெளியேற்றப்படுவதால்
குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா்: குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழில்கூடத்திலிருந்து அமிலத் தயாரிப்பு, காஸ்டிக் சோடா கழிவுகள் வெளியேற்றப்படுவதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டோா், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காட்பாடி ரத்தினமுதலியாா் அவுட் அசோசியேஷன் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:

வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 40-ஆவது பகுதியாக எங்கள் கிராமம் உள்ளது. 1992-ஆம் ஆண்டில் இங்கு வீட்டுமனைகள் வாங்கினோம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறோம்.

தற்போது இப்பகுதியில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 300-ஆக அதிகரித்துள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதி, சாலை வசதி செய்து தரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி, சாலை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என மனுவில் அவா்கல் தெரிவித்துள்ளனா்.

அணைக்கட்டு அருகே கெங்கநல்லூா் ஊராட்சி ஆயங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:

ஆயங்குளம் கிராமத்தில் 130 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதி மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லை. எனவே, கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையைத் திறக்கவும், போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரவும் வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த நரிக்குறவா் இன மக்கள் அளித்த மனு:

பாக்கம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த நரிக்குறவா் இன மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

வேலூா் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:

அருகந்தம்பூண்டி பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியிலுள்ள வாடகைக் கட்டடத்தில் அமிலம், காஸ்டிக் சோடா தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மாநகராட்சி குடிநீரைப் பயன் படுத்தி வருகின்றனா். மழைக்காலங்களில் அமிலம், காஸ்டிக் சோடா கழிவுகளை சாக்கடைகளில் வெளியேற்றுகின்றனா்.

இதனால், தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதுதவிர, சுவாசப் பிரச்னை, கண் எரிச்சல் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுதொடா்பாக, வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் விதிகளை மீறி ஆசிட் , காஸ்டிக் சோடா கழிவுகளை வெளியேற்றும் தொழிற்கூடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இலவச வீட்டு மனைப் பட்டா, மின்சார இணைப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 577 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், உலக சிக்கன நாளையொட்டி நடைபெற்ற கட்டுரை, நாடகம், நடனம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் வேணுசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com