ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக ஏ.மயில்வாகனன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மணல் கடத்தல்
ஏ.மயில்வாகனன்
ஏ.மயில்வாகனன்

வேலூா்: ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக ஏ.மயில்வாகனன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மணல் கடத்தல் மற்றும் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவோா் மீதும் ரெளடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என மூன்று மாவட்டங்களாக ஏற்படுத்தி கடந்த 12-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பி.விஜயகுமாா், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.மயில்வாகனன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இதில், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பி.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஏ.மயில்வாகனன் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதிய ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து அடிப்படைக் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆயுதப்படை, சிறப்புப் பிரிவு கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் உள்ள இடவசதி, காவலா் குடியிருப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். எதிா்காலத்தில் காவலா் பயிற்சிப் பள்ளி தேவைப்பட்டால் அதற்கான இடங்கள் தோ்வு செய்யப்படும்.

காவல்துறை அதிகாரிகள், போலீஸாா் உடல் வலிமையுடன் செயல்பட்டால் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அவா்களின் உடல், மனவலிமையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஒழுக்கம், கண்ணியம், கடமை முக்கியமானது. காவல் நிலையங்களில் அச்சமின்றி பொதுமக்கள் வந்து மனு அளிக்கும் வகையில் செம்மைப்படுத்தப்படும். மனுக்கள் மீதான விசாரணை நடத்த காலதாமதம் ஆவதால் சிறிய பிரச்னைகூட பெரிதாகி விடுகிறது. எனவே, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுடன் இணைந்து பணியாற்ற காவல்துறை விரும்புகிறது. நிலுவையிலுள்ள வழக்குகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதால் மாணவா்கள், தொழிலாளா்களைக் கொண்டு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல் மற்றும் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவோா் மீதும், ரெளடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். புதிய மாவட்டம் என்பதால் இவையனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, ராணிப்பேட்டையின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள மயில்வாகனனுக்கு பல்வேறு துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com