முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
விபத்தில் காயமடைந்த காவலா் பலி
By DIN | Published On : 26th November 2019 11:59 PM | Last Updated : 26th November 2019 11:59 PM | அ+அ அ- |

வேலூா்: காட்பாடி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் கடந்த நவ. 16-ஆம் தேதி காட்பாடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நவ.17-ஆம் தேதி அதிகாலை கரசமங்கலம் வழியாக காட்பாடி நோக்கிச் சென்றபோது, எதிரே எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி, காவல் துறை வாகனம் மீது மோதியது. இதில் உதவி ஆய்வாளா் ராஜா, காவலா்கள் ராஜீவ் காந்தி, சுரேஷ் ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த அவா்கள் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி திங்கள்கிழமை இறந்தாா். அவரது உடல் சொந்த ஊரான குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், குடியாத்தம் டிஎஸ்பி என்.சரவணன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த ராஜீவ்காந்திக்கு வரும் டிச. 1-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.