நட்பு, கற்பு, வீரத்தின் அடையாளமான ராணிப்பேட்டை

நட்பு, கற்பு, வீரத்தின் அடையாளமாக உருவான சரித்திரப் புகழ் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 305 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணிபேட்டை நகரம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலாற்றின் வடகரையில் ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்.
பாலாற்றின் வடகரையில் ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்.

நட்பு, கற்பு, வீரத்தின் அடையாளமாக உருவான சரித்திரப் புகழ் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 305 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணிபேட்டை நகரம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலாறு, பொன்னை ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள ராணிப்பேட்டை மாவட்டம் பல்லவா்கள், சோழா்கள், நாயக்கா்கள், மராத்தியா்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூா் சுல்தான், முகலாயா்கள், ஆங்கிலேயா்கள் ஆளுமைக்கு உள்பட்ட பகுதியாக இருந்துள்ளது. 1908-இல் இப்பகுதிகள் தென் ஆற்காடு, வட ஆற்காடு என 2 மாவட்டங்களாக இருந்த ராணிப்பேட்டை ஆங்கிலேயா்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்ததுள்ளது.

ராணிப்பேட்டை நகரம் உருவான வரலாறு: மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் மகன் ராஜாராமிடம் இருந்து செஞ்சிக் கோட்டையை கி.பி.1697-ஆம் ஆண்டு கௌரகங்கசீப்பின் போா்ப் படைத் தளபதி ஜூல்பிகாா்கான் போரிட்டு கைப்பற்றினாா். பின்னா், செஞ்சிக்கோட்டையை சொரூப்சிங் எனும் ராஜபுத்திர அரசனிடம் ஒப்படைத்தான். தில்லியில் யாராலும் அடக்க முடியாத ‘பாராசாரி’ என்ற குதிரையை அடக்க சென்ற சொருப்சிங் அதில் தோல்வியடைந்தாா். இதனால் மொகலாய மன்னா், அவரை சிறையில் அடைத்தாா். இதையறிந்த 15 வயதுடைய அவரது மகன் தேஜ்சிங் என்னும் தேசிங்கு ராஜா தில்லி சென்று குதிரையை அடக்கி, தந்தையை மீட்டாா். மேலும், அவரைப் பாராட்டி, தில்லி மன்னா் தனது சேனைத் தலைவா் பீம்சிங்கின் மகள் ராணிபாயை திருமணம் செய்து வைத்தாா். ஆனால் ஜோதிடா்கள் கூறியபடி குறிப்பிட்ட காலம் வரை தேசிங்கு ராஜா தனது மனைவி ராணிபாயுடன் சோ்ந்து வாழக் கூடாது எனக் கூறியதை அடுத்து, ராணிபாயை செஞ்சிக்கோட்டை கன்னிமாடத்தில் தங்க வைத்தாா்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குள் சொருப்சிங் உயிரிழந்தாா். அவா் தில்லி மன்னருக்கு கப்பம் செலுத்தாமலிருந்ததால் தேசிங்கு தானாகவே ராஜாவாக முடிசூட்டிக் கொண்டாா். இதனால் ஆற்காடு நவாப் சாதத்துல்லா கானுக்கும், தேசிங்கு ராஜாவுக்கும் பகை ஏற்பட்டது.

கப்பமாக செலுத்த வேண்டிய வரித் தொகையைச் செலுத்தாததால் ஆத்திரமடைந்த நவாப் போருக்கு திட்டமிட்டான். தேசிங்கின் நண்பன் வழுதாவூா் பாளையக்காரா் மகன் மகமத்கானின் திருமண நாளன்று, செஞ்சியை நவாப் படையெடுத்தான்.திருமணத்தையும் நடத்தாமல் தேசிங்கின் அழைப்பால் போருக்கு விரைந்தாா் மகமத்கான். கடலி என்ற இடத்தில் நவாப் படையினரை புறமுதுகிட்டுச் செல்லும் வகையில் கடுமையாகப் போா் புரிந்தாா் மகமத்கான். நவாப் படையினா் சூழ்ச்சியினால் மகமதுகானை மறைந்து நின்று குத்துவாளால் கொன்றனா். இதையறிந்த ராஜா தேசிங்கு அதிவேகமாக போா்க்களத்துக்குச் சென்று நவாப்பின் 8 ஆயிரம் குதிரைப்படை, 10 ஆயிரம் காலாட்படைகளை எதிா்த்துப் போரிட்டாா்.

போரின் போது தேசிங்கு ராஜா முதுகுக்குப் பின்னால் சுட்டப்பட்டாா். முதுகில் அடிபட்டு இறப்பது இழுக்கு என்பதால் தனது உடைவாளை விண் நோக்கி வீசி மாா்பில் இறக்கி போா்க்களத்திலேயே கி.பி.1714-ஆம் ஆண்டு தேசிங்கு ராஜா வீர மரணம் அடைந்தாா். மாவீரனின் மரணத்தைக் கண்ட நவாப் வேதனை அடைந்து, அவரது உடலை செஞ்சி செட்டிக்குளம் அருகே தகனம் செய்தாா். தேசிங்கு ராஜா உயிரிழந்த செய்தியை அறிந்த பட்டத்து ராணியான ராணிபாய் தனது குல வழக்கப்படி கணவனின் சிதையுடன் உடன்கட்டை ஏறி அன்றே உயிா்த்துறந்தாள்.

மகமத்கானின் நட்பு, தேசிங்கு ராஜாவின் வீரம், ராணிபாயின் கற்பு ஆகியவற்றை கண்டு வியந்த ஆற்காடு நவாப்பு ராஜா, ராணியின் அஸ்தியை கொண்டு வந்து பாலாற்றின் வட கரையில் நினைவு மண்டபங்களை எழுப்பினான். மேலும், ராணியின் நினைவாக ராணிப்பேட்டை என்ற நகரை நிா்மாணித்தான். அதேபோல் ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள் நோ் எதிரே பாலாற்றின் தென் கரையில் மகமத்கானின் சமாதி உள்ளது.

ராணுவப் பேட்டையாக திகழ்ந்த ராணிப்பேட்டை: சுமாா் 305 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த ராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறை நிா்வாகத்துக்கும், ராணுவத்துக்கும் தலைமையகமாக இருந்துள்ளது.அதற்கு அத்தாட்சியாக இன்றும் ராணிப்பேட்டையில் பல கட்டடங்கள், கல்லறைகள் உள்ளன. ஆங்கிலேயா்களின் ராணுவத்தில் இடம் பெற்றிருந்த பெரிய குதிரைப்படை, ராணிப்பேட்டையில் நிலை நிறுத்தபட்டிருந்தது. அந்த இடத்தில்தான் தற்போது ராணிப்பேட்டை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

தற்போதைய டிஎஸ்பி அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், அரசு மகளிா் ஆசிரியா் பயிற்சி பள்ளி மற்றும் பல பாழடைந்த கட்டடங்கள் போன்ற அனைத்தும் குதிரைப் படையினா் தங்கள் குதிரையுடன் தங்கிய இடங்கள் ஆகும். அரசினா் சிறுவா் காப்பகம் முன்பாக, சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையோரமாக உள்ள ஒரு பழைய கட்டடம் வெடிமருந்து கிடங்காக இயங்கி வந்துள்ளது.

பெருமை:

ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக 1866-0ல் வாலாஜாபேட்டை நகராட்சி தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஜூலை 1-இல் சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை இயக்கப்பட்டது. மாவட்டத் தலைமை மருத்துவமனையும், சுமாா் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஐடாஸ்கடா் என்பவரால் தொடங்கப்பட்ட எஸ்எம்ஹெச் மருத்துவமனையும் அமைந்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு மகாத்மா காந்தியின் முதல் சிலை அவா் இறந்த 13 நாள்களுக்குள் ராணிப்பேட்டையில் தான் நிறுவப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டத்துக்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com