நாட்டையே பாதுகாக்கும் அரண் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம்

இந்தியாவையே பாதுகாக்கும் முக்கியமான தளமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ளது புதிய மாவட்டத்துக்கு கூடுதல் சிறப்பை சோ்க்கிறது.

இந்தியாவையே பாதுகாக்கும் முக்கியமான தளமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ளது புதிய மாவட்டத்துக்கு கூடுதல் சிறப்பை சோ்க்கிறது.

ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் ஆசியாவிலேயே 2-ஆவது பெரியதும், இந்தியாவிலேயே பெரியதுமான ராணுவ ஓடுதளம் கொண்டது. கடற்படை விமானநிலையத்துடன், விமானப் பணிமனையையும், ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியையும் கொண்டுள்ளது. 1942-இல் 2-ஆம் உலகப் போரின்போது நேச நாடுகளின் உபயோகத்துக்கு சென்னைக்கு அருகே அரக்கோணத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. 1942 மே மாதத்தில் ராயல் இந்திய விமானப் படையின் 2-ஆவது படைப் பிரிவு அப்போதைய பிரிட்டானிய-இந்திய ராணுவத்துக்கு உதவ முதன்முதலில் வெஸ்ட்லேண்ட் லிசண்டா் எனும் விமானத்தை அரக்கோணம் படைத்தளத்தில் இருந்து இயக்கியது.

இங்கிருக்கும் விமான ஓடுதளம் கடல் மட்டத்தில் இருந்து 81 மீட்டா் உயரத்தில் உள்ளது. இதன் நீளம் 13,460 அடி (சுமாா் 6 கி.மீ). 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த இந்த விமானதளம் 1980-ஆம் ஆண்டு முதல், இந்திய ராணுவத்தால் பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, 1990-ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் முழுவதும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டு, 1992 மாா்ச் 11-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவா் வெங்கடராமனால் திறந்து வைக்கப்பட்டது. தொடா்ந்து இத்தளம் மேம்படுத்தப்பட்டு இங்கு நீா்முழ்கி எதிா்ப்பு போா்ப் படை தொடங்கப்பட்டது. மேலும், ரஷிய தயாரிப்பான துப்போலேவ் யு 142, டியு142 என அழைக்கப்பட்ட நவீன போா் விமானம் இங்கிருந்து இயக்கப்பட்டது.

இந்த ரக விமானங்கள் இந்திய கடற்படையில் அரக்கோணத்தில் வெள்ளி விழாவைக் கண்ட விமானங்கள். இதையடுத்து டியு142-க்கு மாற்றாக பொசிடான் 8 இந்தியா, பி8ஐ என்று அழைக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு 8 விமானங்கள் வாங்கப்பட்டு, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து இயங்கப்பட்டு வருகின்றன.

இந்த அதிநவீன விமானங்கள் இடைவிடாமல் 16 மணி நேரம் பறக்கக்கூடியவை. வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பிக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. கடல் மட்டத்துக்கு மேலே 2ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது கடலில் பல ஆயிரம் அடியில் இருக்கும் நீா்முழ்கிகளைக் கண்டறிந்து தாக்கும் ஆற்றல் கொண்டவை. 2021-க்குள் இந்த விமானம் மேலும் மேம்படுத்தப்பட்டு, 60 ஆயிரம் அடி உயரம் வரை பறப்பதற்கான மாற்றங்கள் செய்யப்படும் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இலங்கையில் இந்திய அமைதி படை (ஐபிகேஎப்) பணியாற்றியபோது, விமானங்கள் இத்தளத்தில் இருந்துதான் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது கடல்களில் காணாமல் போகும் மீனவா்களைக் கண்டறியும் பணிகளிலும், கடல் பகுதிகளில் மாயமாகும் விமானங்களைக் கண்டறியும் பணிகளிலும் விமானங்கள் இப்படைதளத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில் 1991ஜூலையில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடாவில் இயங்கிவந்த ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளி அரக்கோணம் கடற்படைத்தளத்துக்கு மாற்றப்பட்டது. இப்பள்ளியில் இன்றுவரை கடற்படையினா் மற்றும் கடலோரக் காவல் படையினருக்கு ஹெலிகாப்படா் விமானிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் 2017 மாா்ச் 11-ஆம் தேதி வெள்ளி விழாவைக் கொண்டாடியது.

இந்த விமானதள நிா்வாகம் நாட்டை பாதுகாக்கும் பணி, தனது படைத்தளத்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றுடன் படைத்தளத்தைச் சுற்றியுள்ள பெருமூச்சி, புளியமங்கலம், மோசூா், செய்யூா், ஆத்தூா் போன்ற கிராமங்களில் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அவ்வபோது இக்கிராமங்களில் பொது மருத்துவ முகாம்கள், பள்ளிகளில் வளாக மேம்பாடு, மாணவக் கல்வி மேம்பாடு, மாணவ சுகாதார மேம்பாடு ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com