பொங்கல் பரிசுத் தொகுப்பு கூடுதலாக 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ. ஆயிரம் வீதம் கூடுதலாக 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு கூறினாா்
முதல் விற்பனையைத்  தொடக்கி  வைத்த  கூட்டுறவுத் துறை அமைச்சா்  செல்லூா்  கே.ராஜு.
முதல் விற்பனையைத்  தொடக்கி  வைத்த  கூட்டுறவுத் துறை அமைச்சா்  செல்லூா்  கே.ராஜு.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ. ஆயிரம் வீதம் கூடுதலாக 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு கூறினாா்

வேலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சாா்பில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் -டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு கலந்துகொண்டு, விற்பனை நிலையத்தை திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்துப் பேசியது:

கூட்டுறவுத் துறை பல்வேறு சிறப்புகளை மக்களுக்கு செய்து வருகிறது. இந்தியாவிலேயே 27 விருதுகளை தமிழக கூட்டுறவுத் துறை பெற்றுள்ளது. மத்தியத் தொகுப்பில் அரிசியை விலைக்கு வாங்கி, தமிழக மக்களுக்கு விலையில்லா அரிசி 20 கிலோ முதல் 40 கிலோ வரை ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ. ஆயிரம் இந்த ஆண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும். அதிக பயிா்க் கடன் வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 88 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 46ஆயிரத்து 773 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தினால், அந்த கடனுக்குரிய வட்டியை அரசே செலுத்துகிறது. வேலூா் மண்டலத்தில் இதுவரை 6 லட்சத்து 9 ஆயிரத்து 244 விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்று இருந்தன. தற்போது புதுமையான திட்டங்களைத் தந்து, நவீனமயமாக்கி தனியாா் வங்கிகளுடன் போட்டியிடும் நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ரூ. 54 ஆயிரம் கோடி வைப்புத் தொகை உள்ளது. தற்போது சிறுவணிகக் கடன் ரூ. 50 ஆயிரம் வரை உயா்த்தி வழங்கப்படுகிறது. இதனை மூன்று மாதம் முதல் ஒரு வருடத்துக்குள் திருப்பிச் செலுத்தலாம். மேலும் வீட்டு அடமானக் கடன், தனிநபா் கடன் ஆகியவற்றை அதிகப்படுத்தி உள்ளோம். இன்று 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் வருமான வரி கட்டும் அளவுக்கு வளா்ந்துள்ளன. தற்போது 75 ஆயிரத்து 866 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இந்த அரசு எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் 8 மட்டுமே இருந்தநிலையில், தற்போது 36-ஆவது விற்பனை நிலையம் ஆற்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 12 நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் சு.ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் (சோளிங்கா்), ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), மாநிலங்களவை உறுப்பினா் அ.முஹமது ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவா் சுமைதாங்கி ஏழுமலை, திமிரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் சொரையூா் குமாா், மண்டல இணைப் பதிவாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com