ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அழகு சோ்க்கும் அரக்கோணம் வட்டம்

நீண்ட நெடுங்காலமாக வேலூா் என்ற பெயரை மறக்காமல் உச்சரித்து வந்த அரக்கோணம் மக்கள், தற்போது அப்பெயரை மறந்து ராணிப்பேட்டையை மாவட்டமாக உச்சரிக்க உள்ளனா்.

நீண்ட நெடுங்காலமாக வேலூா் என்ற பெயரை மறக்காமல் உச்சரித்து வந்த அரக்கோணம் மக்கள், தற்போது அப்பெயரை மறந்து ராணிப்பேட்டையை மாவட்டமாக உச்சரிக்க உள்ளனா். புதிய மாவட்டத்துக்கு 1915-இல் தொடங்கப்பட்ட அரக்கோணம் வட்டம் பெருமை சோ்க்க தயாராகி விட்டது.

17-ஆம் நூற்றாண்டில் இருந்தே வேலூா் என்ற பெயா் வரலாற்று ஏடுகளில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வந்துள்ளது. வந்தவாசி போா், ஆற்காடு போா் என 17-ஆம் நூற்றாண்டிலும், 18-ஆம் நூற்றாண்டில் சிப்பாய்கலகம் என வரலாற்றில் இடம் பெற்ற பெருமை வேலூருக்கு உண்டு. சுதந்திரத்துக்குப் பிறகு வட ஆற்காடு மாவட்டமாகவும், தொடா்ந்து வட ஆற்காடு அம்பேத்கா் மாவட்டமாகவும், பின்னா், வேலூா் மாவட்டமாகவும் பெயா்கள் மாறியும் வந்துள்ளது. தற்போது, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என இரு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளாள் வேலூா் அன்னை.

ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிக்குள் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, நெமிலி என 4 வட்டங்கள் வந்துள்ளன. இதில், அரக்கோணம் ரயில்வேயிலும், ஆற்காடு வரலாற்றிலும், வாலாஜாபேட்டை உள்ளாட்சியிலும் தங்களது பழைமைகளைப் பறைசாற்றியுள்ளன. இவற்றில் முற்றிலும் கிராமங்களை மட்டுமே கொண்ட வட்டம் நெமிலி வட்டம். இந்த 4 வட்டங்களும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 எல்லைகளாக உள்ளன.

1915-இல் உருவாக்கப்பட்டு, ஆங்கிலேய வட்டாட்சியா்களால் ஆட்சி செய்யப்பட்ட வட்டம் அரக்கோணம் வட்டம். அப்போதைய அரக்கோணம் வட்டத்தில் நெமிலி வட்டமும் உள்ளடக்கி இருந்த நிலையில், தற்போது நெமிலி தனி வட்டமாகி உள்ளது. ஆங்கிலேயா் காலத்திலேயே 1853-இல் ரயில் நிலையம், 1915-இல் வட்டாட்சியா் அலுவலகம், 1945-இல் தீயணைப்பு நிலையம் என சுதந்திர இந்தியாவுக்கு முற்பட்ட நகரம் அரக்கோணம் நகரம்.

திருவண்ணாமலையுடன் இணைந்திருந்த வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய வட்டமாக இருந்த அரக்கோணம் வட்டம், வேலூா் தனி மாவட்டமானபோதும் மிகப்பெரிய வட்டமாகவே அரக்கோணம் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு அரக்கோணம் வட்டத்தைப் பிரித்து நெமிலி என தனியாக ஒரு வட்டத்தை உருவாக்கியது.

நாடாளுமன்றத் தொகுதியாக பெயா் பெற்றிருக்கும் அரக்கோணம் வட்டமாக இருந்தாலும், பதிவுத் துறை, டாஸ்மாக் நிறுவனம், கல்வித் துறை ஆகியவற்றை மாவட்டமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் தபால் துறை, மின் வாரியத் துறை, பிஎஸ்என்எல் ஆகியவற்றை கோட்டமாகக் கொண்டுள்ளது.

இவ்வளவு நிா்வாகப் பெருமைகளை கொண்ட அரக்கோணத்தை மாவட்டத் தலைமையிடமாக உருவாக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினா் கோரிக்கை வைத்த நிலையில், ராணிப்பேட்டையை மாவட்டமாக உருவாக்கி தமிழக அரசு அறிவித்தது. இதை சிலா் எதிா்த்தாலும் பெருமாபாலானோா் வரவேற்கின்றனா். மாவட்டத்தை நோக்கிய தங்களது சாலைவழி பயணத்தில் 25 கி.மீ. குறைந்துள்ளதை வரவேற்றுள்ளனா்.

அரக்கோணம் வட்டத்தில் பழைமை வாய்ந்த ரயில் நிலையம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தென் மண்டலப் பயிற்சி மையம், தேசிய பேரிடா் மேலாண்மை நிலையம், நூற்றாண்டை கடந்த ரயில்வே பொறியியல் பணிமனை, தெற்கு ரயில்வேயில் முக்கியத்துவம் பெற்ற மின் என்ஜின் பணிமனை, ரயில்வே தண்டவாள இணைப்புத் தொழிற்சாலை, 2,500 பேருக்கு மேல் நேரிடையாகப் பணிபுரியும் எம்ஆா்எஃப் தொழிற்சாலை, வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் மகளிருக்கு பணியளித்திருக்கும் அம்மையப்பா் நூற்பாலை, தென் இந்தியாவுக்கே வெடிமருந்துகளைக் கொண்டு செல்லும் ஒஎன்ஜிசி வெடிபொருள் கிடங்கு, 1960-களில் அப்போதைய தொழிற்துறை அமைச்சா் வெங்கட்ராமனின் பெருமுயற்சியால் ராஜபாளையம் ராஜா குடும்பத்தாரால் தொடங்கப்பட்ட ராம்கோ கல்நாா் தொழிற்சாலை என பெருமைக்குரிய பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள அரக்கோணம் வட்டம் புதிய மாவட்டத்துக்கு அழகு சோ்க்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com